விழுப்புரத்தில் மினி மாரத்தான் போட்டி

75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவையொட்டி விழுப்புரத்தில் நடந்த மினி மாரத்தான் போட்டியில் மாணவர்களுடன் கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்றனர்.;

Update: 2022-04-08 16:36 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மைதானத்தில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவையொட்டி நேற்று காலை மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா முன்னிலையில் மாவட்ட கலெக்டர் மோகன், கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த மாரத்தான் போட்டியில் அரசு, தனியார் பள்ளி- கல்லூரிகளை சேர்ந்த 270 மாணவ- மாணவிகள் கலந்துகொண்டு இலக்கை நோக்கி ஆர்வமுடனும் உத்வேகத்துடனும் ஓடினர். இவர்களுடன் மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோரும் பங்கேற்று இலக்கை நோக்கி ஓடினார்கள்.

பாராட்டு சான்றிதழ்

இந்த மாரத்தான் ஓட்டம், மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இருந்து புதிய பஸ் நிலையம், எல்லீஸ்சத்திரம் சாலை, இ.எஸ்.கார்டன் வழியாக சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழாவின் பெருமையை பறைசாற்றும் விதமாக பொதுமக்கள் கண்டு உணரும் வண்ணம் மீண்டும் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை வந்தடைந்தது.
அதனை தொடர்ந்து மினி மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் மாவட்ட கலெக்டர் மோகன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா ஆகியோர் நன்றியையும், பாராட்டுகளையும் தெரிவித்தனர். மேலும் இப்போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் பாராட்டுச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
இதில் விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பாண்டி, விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி, விழுப்புரம் நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சின்னப்பன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள் பெருமாள், செந்தில்குமார், விழுப்புரம் தாசில்தார் ஆனந்தகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்