``தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மாணவர்கள் ஆபத்தான பயணம்
நெல்லை மாவட்டம் அம்பையில் இருந்து ஏர்மாள்புரத்துக்கு காலையில் அரசு பஸ் செல்கிறது. இந்த வழித்தடத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் இந்த அரசு பஸ்சில் (அம்பை-ஏர்மாள்புரம்) வி.கே.புரம், கொட்டாரம், காசிகீப்பர்தோப்பு, திருப்பதியாபுரம், கோரையார்குளம், வேம்பையாபுரம், செட்டிமேடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்கிறார்கள். எனவே உடனே காலை, மாலை நேரங்களில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டுகிறேன்.
- ஆறுமுகநயினார், விக்கிரமசிங்கபுரம்.
போக்குவரத்து சிக்னல் வேண்டும்
பத்தமடை மெயின்ரோட்டில் நான்கு ரோடுகள் இணையும் பகுதி உள்ளது. இந்த பகுதியில் மேற்கு மற்றும் கிழக்கில் இருந்து அதிக வேகத்தில் வரும் வாகனங்களால் விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒருவித அச்சத்துடன் ரோட்டை கடந்து செல்லும் நிலை இருக்கிறது. தற்போது ரோடு விரிவாக்கம் செய்யப்படுகிறது. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சிக்னல் அமைக்க வேண்டும்.
- ரவிச்சந்திரன், பத்தமடை.
பாதியில் நிற்கும் பணி
கூந்தன்குளம் 3-வது வார்டு நடுத்தெருவில் ரோட்டையொட்டி பக்கத்துக்கு தெருவிற்கு செல்லும் வழியில் கழிவுநீர் வடிகால் அமைக்க பள்ளம் தோண்டினார்கள். அந்த பணி முடிவடையாமல் பாதியில் நிற்கிறது. இதனால் பள்ளத்தில் தண்ணீர் தேங்கியபின், வெளியே பாய்ந்தோடுகிறது. அந்த வழியாக வரும் சிறுவர்கள், சைக்கிளில் செல்வோர் அந்த பள்ளத்தில் விழுந்து பாதிப்பு அடைகிறார்கள். எனவே, அந்த பணியை விரைந்து முடிக்க வேண்டுகிறேன்.
- லிங்கதுரை, கூந்தன்குளம்.
தெருநாய்கள் தொல்லை
நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரம் விநாயகர் கோவில் முன் மெயின்ரோட்டில் தெருநாய்கள் சுற்றித்திரிகின்றன. இதனால் பொதுமக்கள் அச்சமடைகிறார்கள். இரவிலும் நாய்கள் குரைக்கும் பலத்த சத்தம் காரணமாக அந்த பகுதி மக்கள் வீடுகளில் நிம்மதியாக தூங்க முடியாமல் கஷ்டப்படுகிறார்கள். எனவே, தெருநாய்கள் தொல்லையை போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- நல்லசிவன், மீனாட்சிபுரம்.
பாலத்தை சீரமைக்க வேண்டும்
ராதாபுரம்-வள்ளியூர் மெயின்ரோட்டில் சுப்பிரமணியபேரி பிரிவில் உள்ள தரைப்பாலம் குண்டும், குழியுமாக உள்ளது. மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதால் வாகனங்கள் செல்ல சிரமப்படுகின்றன. எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இதை சீரமைக்க கேட்டுக்கொள்கிறேன்.
- சுந்தரம், ராதாபுரம்.
சுற்றுச்சுவர் இடிந்த சுகாதார நிலையம்
மானூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுற்றுச்சுவர் இடிந்து அருகில் சாய்ந்து உள்ளது. இதனால் இந்த சுகாதார நிலையத்தின் சுற்றுச்சுவரை கட்ட வேண்டுகிறேன்.
- ஆபிரகாம், மானூர்.
பழுதடைந்த ஆழ்குழாய் கிணறுகள்
சேரன்மாதேவி ஊராட்சி ஒன்றியம் தெற்கு வீரவநல்லூர் ஊராட்சி 5-வது வார்டு பகுதியில் 3 ஆழ்குழாய் கிணறுகள் பழுதடைந்து விட்டன. அவற்றை பழுதுநீக்காமல் அப்படிேய போட்டு விட்டனர். நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பயன்படுத்தி வந்த ஆழ்குழாய் கிணறுகள் தற்போது யாருக்கும் பயன் இல்லாமல் கிடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதில் நடவடிக்கை எடுத்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.
- சுதாகரன், வீரவநல்லூர்.
பஸ் வசதி தேவை
தென்காசி மாவட்டம் சுரண்டையில் இருந்து பரன்குன்றாபுரம், குறிச்சான்பெட்டி, மேலக்கலங்கல், கீழக்கலங்கல், குறிஞ்சாக்குளம், சண்முகநல்லூர் வழியாக சங்கரன்கோவிலுக்கு நேரடி பஸ் வசதி இல்லை. இதனால் சுரண்டையில் இருந்து பஸ்கள் மாறிமாறி செல்ல வேண்டி உள்ளது. எனவே, நேரடி பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
- தட்சணாமூர்த்தி, கீழக்கலங்கல்.
சாலையை சீரமைப்பார்களா?
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மாதா கோவில் ரோடு, பகவத்சிங் தெரு ரோடு மிகவும் மோசமாக உள்ளது. இதனால் பள்ளி, மாணவ-மாணவிகள், பொதுமக்கள் சாலையில் செல்ல மிகவும் சிரமப்படுகிறார்கள். எனவே, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சீரமைக்க வேண்டும்.
- நேதாஜி பாலமுருகன், கோவில்பட்டி.