ஏரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 7 மயில்கள்
கலசபாக்கம் அருகே ஏரியில் மர்மமான முறையில் இறந்து கிடந்த 7 மயில்கள்
கலசபாக்கம்
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கத்தை அடுத்த காப்பலூர் பெரிய ஏரியில் 3 ஆண் மயில்கள், 4 பெண் மயில்கள் என 7 மயில்கள் மர்மமான முறையில் இறந்து அழுகி கிடந்தன.
அந்த வழியாகச் சென்றவர்கள் பார்த்து விட்டு வனத்துறைக்குத் தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கால்நடை மருத்துவர் சம்பவ இடத்துக்கு வந்து பிரேதப் பரிசோதனை செய்தார்.
அப்போது வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்ததும் மயில்கள் எப்படி இறந்தன? என்பது குறித்து தெரிய வரும்.
மயில்கள் விவசாய நிலங்களில் புகுந்து சேதப்படுத்தி வருவதால், அதைத் தடுக்க விவசாயிகள் யாரோ விஷம் வைத்து கொல்கிறார்களா? என விசாரணை நடத்தி வருகிறோம்.
மயில்களுக்கு விஷம் வைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும், என்றனர்.