குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை; நண்பர்கள் 2 பேர் கைது

பெங்களூருவில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பாட்டிலால் குத்தி வாலிபர் கொலை செய்யப்பட்டார். இதுதெடா்பாக அவரது நண்பர்கள் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2022-04-08 15:41 GMT
பெங்களூரு:

குடிபோதையில் தகராறு

  பெங்களூரு ஹாவேரி நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்(வயது 23). டிரைவரான இவர், கார் மற்றும் ஆட்டோ ஓட்டி வந்தார். இவரது நண்பர்கள் சசி மற்றும் ஸ்ரீதர் ஆவார்கள். நேற்று முன்தினம் இரவு சந்தோஷ் தனது நண்பர்களான சசி, ஸ்ரீதருடன் மதுஅருந்த சென்றார். மகாதேவபுராவில் உள்ள மதுபான விடுதியில் வைத்து 3 பேரும் மதுஅருந்தி உள்ளனர். அங்கு வைத்து சசி குடிப்பதற்காக ஊற்றி வைத்திருந்த மதுபானத்தை எடுத்து சந்தோஷ் குடித்ததாக தெரிகிறது.

  இந்த விவகாரம் தொடர்பாக மதுபான விடுதியில் வைத்தே 2 பேருக்கும் இடையே குடிபோதையில் வாக்குவாதம் உண்டானது. உடனே அங்கிருந்தவர்கள் 2 பேரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதையடுத்து, மதுபான விடுதியில் இருந்து சந்தோஷ், சசி, ஸ்ரீதா் ஆகியோர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.

பாட்டிலால் குத்திக்கொலை

  அவ்வாறு செல்லும் போது மதுபானத்தை எடுத்து குடித்த விவகாரம் தொடர்பாக சந்தோசுக்கும், சசிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அந்த சந்தர்ப்பத்தில் ஆத்திரமடைந்த சசி, தன்னிடம் இருந்த பாட்டிலை உடைத்து சந்தோசின் கழுத்து, வயிற்றில் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சந்தோஷ் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்து விட்டார்.

  தகவல் அறிந்ததும் மகாதேவபுரா போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது குடிபோதையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவும், மதுபானத்தை எடுத்து குடித்ததாலும் சந்தோசை சசி கொலை செய்திருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மகாதேவபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சசி, ஸ்ரீதரை கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்