மத பிரச்சினையில் பா.ஜனதாவுக்கு தொடர்பு இல்லை;ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. சொல்கிறார்
கர்நாடகத்தில் நடக்கும் ஹிஜாப், ஹலால் போன்ற மத பிரச்சினைகளுக்கும், பா.ஜனதாவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. கூறினார்.
பெங்களூரு:
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையின் அரசியல் செயலாளர் ரேணுகாச்சார்யா எம்.எல்.ஏ. பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
உண்மை இல்லை
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி நடக்கிறது. 5 ஆண்டுகள் ஆட்சி நடத்த மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். மீதமுள்ள ஒரு ஆண்டில் மக்களின்
நம்பிக்கையை பெற நாங்கள் முயற்சி செய்வோம். சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெறும் என்று வரும் தகவல்களில் உண்மை இல்லை. ஆட்சி காலம் முழுமையாக முடிவடைந்த பிறகே தேர்தல் நடைபெறும்.
மாநிலத்தில் நல்லாட்சி நடந்து வருகிறது. அவ்வாறு இருக்க எதற்காக முன்கூட்டியே தேர்தலை எதிர்கொள்ள வேண்டும்?. உள்துறை மந்திரி அமித்ஷாவை ஜெகதீஷ்ஷெட்டர் ஏன் சந்தித்தார் என்று எனக்கு தெரியாது. ஆனால் கட்சியின் மூத்த தலைவரை அமித்ஷா சந்தித்து பேசியதில் எந்த தவறும் இல்லை. கர்நாடகத்தில் கட்சியை பலப்படுத்தும் விதமாக இந்த சந்திப்பு நடந்திருக்கும்.
பா.ஜனதாவுக்கு தொடர்பு இல்லை
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நீக்கப்பட மாட்டார். அவரது தலைமையில் கட்சி மேலிட தலைவர்களுக்கு நம்பிக்கை உள்ளது. அனைத்து எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் தான் அவர் முதல்-மந்திரியாக தேர்ந்து எடுக்கப்பட்டார். நாங்கள் மத பிரச்சினைகளை உருவாக்கி அதன் மூலம் தேர்தலை சந்திக்க விரும்பவில்லை. மத்திய-மாநில அரசுகளின் சாதனைகளின் அடிப்படையில் மக்களிடம் ஓட்டுகளை கேட்போம். கர்நாடகத்தில் தற்போது நடைபெறும் ஹிஜாப், ஹலால் போன்ற மத பிரச்சினைகளுக்கும், பா.ஜனதாவுக்கும் தொடர்பு இல்லை.
இவ்வாறு ரேணுகாச்சார்யா கூறினார்.