ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளை வாங்க வர்த்தகர்கள் ஆர்வம்

இலங்கையில் பொருளாதார பாதிப்பு காரணமாக ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளை வாங்க வர்த்தகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். குன்னூரில் கிலோவுக்கு ரூ.132 வரை ஏலம் போனது.

Update: 2022-04-08 15:20 GMT
ஊட்டி

இலங்கையில் பொருளாதார பாதிப்பு காரணமாக ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளை வாங்க வர்த்தகர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். குன்னூரில் கிலோவுக்கு ரூ.132 வரை ஏலம் போனது.

பச்சை தேயிலை விவசாயம்

நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக பச்சை தேயிலை விவசாயம் உள்ளது. இதை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளனர். மேலும் கூட்டுறவு தொழிற்சாலைகள் மற்றும் தனியார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலைத்தூள், குன்னூரில் உள்ள ஏல மையம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. 

இதற்கிடையில் இலங்கையில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்டதால், அங்கு முக்கிய தொழிலாக உள்ள தேயிலைத்தூள் உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 90 சதவீத ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ஏற்றுமதியில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. 

ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு

இந்த நிலையில் இலங்கையில் பொருளாதார பாதிப்பால், இந்திய தேயிலை ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று இந்திய முதலீட்டு தகவல் மற்றும் கடன் மதிப்பீட்டு நிறுவனம் தெரிவித்து உள்ளது. அதன்படி இந்திய ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூளை வாங்க வர்த்தகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் நீலகிரியில் ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூள் உற்பத்தி அதிகரித்து வருகிறது. 

இதற்கிடையில் குன்னூர் ஏல மையத்துக்கு ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூள் வரத்து அதிகரித்து உள்ளது. இன்று நடந்த எலத்தில் 98 சதவீத தேயிலைத்தூள் விற்பனையானது. கிலோவுக்கு ரூ.115 முதல் ரூ.132 வரை விலை கிடைத்தது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நடந்த ஏலத்தில் கிலோவுக்கு ரூ.105 முதல் ரூ.114 வரைதான் விலை கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோன்று பெரிய எஸ்டேட் நிறுவனங்களின் ஆர்தோடக்ஸ் தேயிலைத்தூள் கிலோவுக்கு ரூ.250 முதல் ரூ.300 வரை விலை கிடைக்கிறது. 

மேலும் செய்திகள்