நிலக்கடலை அறுவடை பணி தீவிரம்

வேளாங்கண்ணி அருகே நிலக்கடலை அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-04-08 14:59 GMT
வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணி அருகே நிலக்கடலை அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நிலக்கடலை அறுவடை பணி
 வேளாங்கண்ணியை அடுத்த புதுப்பள்ளி, வேட்டைக்காரனிருப்பு, விழுந்தமாவடி காமேஸ்வரம், பிரதாபராமபுரம் உள்ளிட்ட கடலோர கிராம பகுதிகளில் 1,000 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டது. இந்த ஆண்டு பெய்த மழையால் நிலக்கடலை பயிர்கள் பாதிக்கப்பட்டன. 
மழையில் இருந்து தப்பிய பயிர்கள் உரம் மற்றும் பூச்சி மருந்து தெளித்து பாதுகாத்து வந்தனர். தற்போது அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மழையால் பாதிக்கப்பட்டதால் போதிய விளைச்சல் இல்லாமலும், நிலகடலை தரமற்ற நிலையிலும் உள்ளது.
மகசூல் பாதிப்பு
 வெள்ளை ஈ பூச்சி தாக்குதாலும், கரும்புள்ளி நோயினால் பயிர்கள் பாதிக்கப்பட்டதால் அறுவடையின் போது வயலில் நிலக்கடலை உதிர்ந்து கால்நடைகளுக்கு கூட உணவாக பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மகசூல் குறைந்து வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. 
எனவே தமிழக அரசு நெல்லை நேரடி கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்வது போல் நிலக்கடலையும் நேரடி கொள்முதல் நிலையம் மூலம் கொள்முதல் செய்ய வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்