ஊட்டி
ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கடந்த மாதம் 18-ந் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா தொடங்கியது.
இதையொட்டி கடந்த 21-ந் தேதி முதல் தேர் ஊர்வலம் நடந்து வருகிறது. தினமும் ஒவ்வொரு சமூகம், அமைப்பு சார்பில் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதன்படி நேற்று இரவிலும் தேர் ஊர்வலம் நடந்தது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அபிராம சுந்தரி அலங்காரத்தில் மாரியம்மன் எழுந்தருளினார்.
சிறப்பு பூஜைக்கு பின்னர் மாரியம்மன் கோவில் முன்பு இருந்து தேர் ஊர்வலம் தொடங்கியது. லோயர் பஜார், ராஜீவ்காந்தி ரவுண்டானா, மெயின் பஜார், காபிஹவுஸ் ரவுண்டானா வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. முக்கிய வீதிகளில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஊர்வலத்தையொட்டி கலைஞர்கள் கிருஷ்ணர், சிவன், முருகன், மீனாட்சி போன்ற சாமி வேடமிட்டு தத்ரூபமாக நடனம் ஆடினர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.