கோவில்பட்டியில் மூதாட்டிக்கு கால் மாற்றி அறுவை சிகிச்சை செய்யப்பட்டதால் பரபரப்பு

கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் மூதாட்டிக்கு கால் மாற்றி அறுவைசிகிச்சை செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2022-04-08 14:35 GMT
கோவில்பட்டி:
கோவில்பட்டியை அடுத்துள்ள இலுப்பை யூரணியை சேர்ந்த மணிமுருக குமார் என்பவரது மனைவி குருவம்மாள் (வயது 67). இவருக்கு வலது காலில் அடிக்கடி வலி ஏற்பட்டதால் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரை பரிசோதனை செய்த டாக்டர் சீனிவாசகன் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார். அதன்படி கடந்த 4-ந் தேதி அவரது தலைமையில் மூதாட்டிக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப் பட்டுள்ளது. சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த குருவம்மாள், வலது காலுக்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தற்போது 2 கால்களிலும் வலியால் அவதிப்பட்டு வருவதாக ஆஸ்பத்திரி அதிகாரிகளிடம் அவர் புகார் செய்துள்ளார்.
இதுகுறித்து டாக்டர் சீனிவாசகன் கூறுகையில், அவரது இடது காலில் கொழுப்பு கட்டி இருந்தது. ஆகையால் தான் அதனை அறுவை சிகிச்சை செய்து ஆய்வுக்கு அனுப்பி உள்ளோம். இதில் எந்த பிரச்சினையும் இல்லை. வலது காலிலும் அறுவை சிகிச்சை செய்ய இருக்கிறோம். இதற்கிடையில், யாரோ தேவையில்லாமல் பிரச்சினை கிளப்பி இருப்பதாக கூறினார். இதுகுறித்து மருத்துவமனை அதிகாரி ஒருவர் கூறுகையில், இப்பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்