செங்கல்பட்டு மாவட்டத்தில் கலைஞர் எழுதுகோல் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்பு - கலெக்டர் ராகுல்நாத்
கலைஞர் எழுதுகோல் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
விருது
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
ஒவ்வோர் ஆண்டும் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி, ஒரு சிறந்த இதழ் ஆசிரியருக்கு ‘‘கலைஞர் எழுதுகோல் விருது’’ வழங்கி கவுரவிக்கப்படும் என தமிழக அரசு ஆணை வெளியிட்டு உள்ளது. அதன் அடிப்படையில் 2021-ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.
இந்த விருதில் ரூ.5 லட்சம் பரிசுத் தொகையுடன், பாராட்டுச் சான்றிதழும் அடங்கும். கலைஞர் எழுதுகோல் விருதிற்கான தகுதிகள் பின்வருமாறு:-
விண்ணப்பதாரர் தமிழ்நாட்டை சேர்ந்தவராகவும், தமிழ் இதழியல் துறையில் குறைந்தபட்சம் 10 ஆண்டுகளாக தொடர்ந்து பணிபுரிகிறவராகவும் இருக்க வேண்டும். பத்திரிகைப் பணியை முழுநேரப் பணியாகக் கொண்டிருக்க வேண்டும். இதழியல் துறையில் சமூக மேம்பாட்டிற்காகவும், விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டிற்காகவும், பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் பங்காற்றியிருக்க வேண்டும். விண்ணப்பதாரரின் எழுத்துகள் பொதுமக்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
30-ந் தேதிக்குள்
இந்த விருதுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரர் நேரடியாகவோ, மற்றொருவர் பரிந்துரையின் அடிப்படையிலோ, பணிபுரியும் நிறுவனத்தின் பரிந்துறையின் மூலமாகவோ அனுப்பலாம்.
இதற்காக அரசால் அமைக்கப்பட்டுள்ள தேர்வு குழுவின் முடிவே இறுதியானது. மேற்காணும் தகுதிகளைக் கொண்ட விண்ணப்பங்கள், விரிவான விவரங்கள் மற்றும் ஆவணங்களுடன் இயக்குனர் செய்தி மக்கள் தொடர்புத் துறை, தலைமைச் செயலகம், சென்னை 600 009 என்ற முகவரிக்கு வருகின்ற 30-ந் தேதிக்குள் அனுப்பிட வேண்டும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்தது.