ஜோலார்பேட்டை அருகே ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் 5 பவுன் தாலிசெயின் பறிப்பு
ஜோலார்பேட்டை அருகே சிக்கனலுக்காக நின்ற ரெயிலில் பெண் பயணியிடம், 5 பவுன் தாலி செயினை பறித்து சென்ற முகமூடி ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை
ஜோலார்பேட்டை அருகே சிக்கனலுக்காக நின்ற ரெயிலில் பெண் பயணியிடம், 5 பவுன் தாலி செயினை பறித்து சென்ற முகமூடி ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.
5 பவுன் செயின் பறிப்பு
சென்னை சூளைமேடு பகுதியில் உள்ள லோகநாதன் நகர் முதல் தெருவில் வசித்துவருபவர் கிஷோர். இவரது மனைவி ரஞ்சலி (வயது 25). இவர் பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். விடுமுறையில் கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னை செல்லும் காவேரி விரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னைக்கு சென்றார்.
அதிகாலை 2.30 மணியளவில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே பக்கிரிதக்கா என்ற இடத்தில் சிக்கனலுக்காக ரெயில் நின்றது. அப்போது முகத்தை கர்சீப்பால் மறைத்து கட்டியிருந்த மர்ம நபர் ஒருவர் ரஞ்சலி கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தாலி செயினை பறித்துக் கொண்டு ஓடிவிட்டார்.
போலீஸ் விசாரணை
இதுகுறித்து ரஞ்சலி் சென்னை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பவம் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் அருகே நடந்ததால் புகார் மனுவை ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து தகவலறிந்ததும் சேலம் ரெயில்வே துணைபோலீஸ் சூப்பிரண்டு குணசேகரன் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார்.
மேலும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி, சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.