ஹெல்மட் இன்றி வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து - மும்பை போலீஸ்
ஹெல்மட் இன்றி வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என மும்பை போலீஸ் அறிவித்து உள்ளது.
மும்பை,
ஹெல்மட் இன்றி வாகனம் ஓட்டினால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என மும்பை போலீஸ் அறிவித்து உள்ளது.
3 மாதங்களுக்கு ரத்து
மும்பை போலீசார் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். குறிப்பாக ராங் சைடில் வாகனம் ஓட்டிச்செல்பவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்தநிலையில் போலீசார் தற்போது ஹெல்மட் இன்றி வாகனம் ஓட்டிச்செல்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்தனர். முன்னதாக ஹெல்மெட் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய பரிசீலிக்கப்பட்டது. பின்னர் அந்த முடிவு கைவிடப்பட்டது.
தற்போது மும்பை போலீசார் ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டும் நபர்களின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்வதாக அறிவித்து உள்ளனர். இதுகுறித்து போக்குவரத்து பிரிவு துணை கமிஷனர் ராஜ்திலக் ரோஷன் கூறுகையில், " ஹெல்மட் அணியாதவர்களுக்கு வழக்கம் போல இ-செல்லான் வழங்கப்படும். மேலும் அதுகுறித்த தகவல் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு அனுப்படும். அவர்கள் ஹெல்மட் அணியாதவர்களின் ஓட்டுனர் உரிமத்தை 3 மாதங்களுக்கு ரத்து செய்வார்கள்.
விழிப்புணர்வு வீடியோ
இதேபோல விதிமீறலில் ஈடுபடும் ஓட்டுனர்களுக்கு சாலை போக்குவரத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அருகில் உள்ள போக்குவரத்து சவுக்கியில் 2 மணி நேரம் வீடியோ காட்சிகள் காண்பிக்கப்படும் " என்றார்.
இதேபோல பள்ளி, கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு சாலை விதிகள், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வீடியோக்களை காண்பிக்க போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.