ஆறுமுகநேரியில் சமூக வலைதளங்களில் போலீசார் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்டவர் கைது

ஆறுமுகநேரி பகுதியில் சமூக வலைதளங்களில் போலீசார் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்ட கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-04-08 12:20 GMT
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி பகுதியில் சமூக வலைதளங்களில் போலீசார் குறித்து அவதூறு கருத்துக்களை பதிவிட்ட கும்பலை சேர்ந்த ஒருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 6 பேரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
பொதுமக்கள் சாலைமறியல்
ஆறுமுகநேரி ராஜமன்யபுரம் பகுதியில் கடந்த மாதம் 24-ந் தேதி பைசோன் என்பவர் தாக்கப்பட்டது குறித்து முத்துராஜ் என்பவரை ஆறுமுகநேரி போலீசார் கைது செய்தனர்.
மேலும் இது தொடர்பாக அப்பகுதியில் குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக பலரை போலீசார் தேடிவருகின்றனர்.
இந்நிலையில் ராஜமன்யபுரம், முத்துகிருஷ்ணாபுரம், சீனந்தோப்பு, காமராஜபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கூடி இந்த பகுதியில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் இருப்பதாக கூறியும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் கடந்த மாதம் 27-ந்தேதி ஆறுமுகநேரி மெயின் பஜாரில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சமூக வலைதளங்களில் அவதூறு
இதை தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், திருச்செந்தூர் போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஸ்சிங் ஆகியார் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குற்றச் செயல்களில் ஈடுபடும் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
கடந்த 30-ந் தேதி ராஜமன்யபுரம் சி.எஸ்.ஐ. ஆலயத்துக்கு பின்புறம் நிறுத்தப்பட்டிருந்த ஒரு மினி லாரிக்கு மர்ம கும்பல் தீ வைத்தது. இது தொடர்பாக சிலர் மீது வழக்குப்பதிவு செய்து ஆறுமுகநேரி போலீசார் தேடிவந்தனர்.
இந்த நிலையில் மறுநாள் சமூக வலைதளங்களில் ஆறுமுகநேரி போலீசாரை பற்றியும் மற்றும் உயர் அதிகாரிகள் குறித்தும்  குறும்படம் மூலம் அவதூறான கருத்துக்களை ஒரு கும்பல் பதிவிட்டது. இது பொதுமக்கள் மத்தியிலும், போலீசார் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
வாலிபர் சிக்கினார்
இது தொடர்பாக ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து (வயது 20) என்பவரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய முத்துராஜ், நடேசன், முத்துக்குட்டி, ஷியாம், பன்னீர்செல்வம், இம்மானுவேல் ஆகிய 6 பேர் மீது ஆறுமுகநேரி போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்