சமையல் எண்ணெய் விலையும் கிடுகிடு உயர்வு
சமையல் எண்ணெய் விலையும் கிடுகிடு உயர்ந்துள்ளது.
திருச்சி:
விலைவாசி கடுமையாக உயர்வு
உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் தொடர்ந்து நீடித்து வருவதால், இந்தியாவில் பல்வேறு பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்தியாவில் 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கும் வரை, பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது. தேர்தல் முடிந்த சில நாட்களிலேயே அவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தினமும் உயர்த்திக்கொண்டே வருகிறது. மேலும் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் ஆயிரம் ரூபாயை நெருங்கி விட்டது. வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை ரூ.2,500-ஐ தாண்டி விட்டது.
இதனால், சரக்கு வாகனங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்ய முடியாமல் திணறி வருகின்றனர். அதே வேளையில் சொந்தமாக கார், மோட்டார் சைக்கிள் வைத்திருப்பவர்களும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடும் உயர்வை சந்தித்து வருகிறது. கட்டுமான பொருட்களான சிமெண்டு, கம்பி, மணல் உள்ளிட்டவைகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.
எண்ணெய் விலை கடும் உயர்வு
இந்நிலையில் ரஷியா-உக்ரைன் போர் காரணமாக எண்ணெய் விலையும் நாளுக்கு நாள் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. உக்ரைனில் இருந்துதான் இந்தியாவுக்கு சூரியகாந்தி எண்ணெய் அதிக அளவில் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. லிட்டர் ரூ.100-க்கு விற்கப்பட்டு வந்த சூரியகாந்தி எண்ெணய் தற்போது லிட்டர் ரூ.200 வரை உயர்ந்திருப்பதாக வியாபாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட அதன் விலை 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
இதேபோல் நல்லெண்ணெய் லிட்டர் ரூ.200-ல் இருந்து ரூ.230 ஆகவும், கடலை எண்ணெய் ரூ.180-ல் இருந்து ரூ.220 ஆகவும், தேங்காய் எண்ணெய் ரூ.160-ல் இருந்து ரூ.200 ஆகவும், ரீபைண்ட் ஆயில் ரூ.110-ல் இருந்து ரூ.160 ஆகவும் உயர்ந்துள்ளது.
இல்லத்தரசிகள் அதிர்ச்சி
மேலும் லிட்டர் ரூ.70-க்கு விற்பனையான பாமாயில் ரூ.140 ஆக விலை உயர்ந்துள்ளது. சமையல் எண்ணெய் விலை உயர்வு இல்லத்தரசிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. சராசரியாக லிட்டருக்கு ரூ.40 வரை விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில் துவரம் பருப்பு, பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, பச்சைப்பயிறு உள்ளிட்ட பருப்பு வகைகளில் பெரிய அளவில் மாற்றம் இல்லை. ரூ.10 முதல் ரூ.20 வரை சில பருப்பு வகைகள் உயர்ந்தும், சில பருப்பு வகைகள் ரகத்திற்கு ஏற்பு விலை குறைந்தும் உள்ளதாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.