ஊராட்சி தலைவரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
ஊராட்சி தலைவரை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
துவரங்குறிச்சி:
திருச்சி மாவட்டம், வளநாடு கிராமத்தில் உள்ள காசிம்நகரில் ஆழ்குழாய் கிணறு அமைக்கவும், புதிதாக குடிநீர் தொட்டி வைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் வளநாடு ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேஷ் காசிம்நகரில் ஆழ்குழாய் கிணறு அமைக்காமல், சந்தைப்பேட்டை தெருவில் உள்ள ஒரு இடத்தை தேர்வு செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அந்த இடத்தை போக்குவரத்து பாதையாக பயன்படுத்தி வருவதால் அங்கு ஆழ்குழாய் கிணறு அமைக்க எதிர்ப்பு தெரிவித்தும், ஊராட்சி தலைவரை கண்டித்து அப்பகுதி மக்கள், நேற்று வளநாடு கடைவீதியில் கைகாட்டி-பாலக்குறிச்சி சாலையில் அமர்ந்து கருப்புக் கொடியை ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மருங்காபுரி ஒன்றியக்குழு தலைவர் பழனியாண்டி, ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் மற்றும் வளநாடு போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வேறுபகுதியை தேர்வு செய்து அங்கு ஆழ்குழாய் கிணறு அமைக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.