பஸ்சின் மேற்கூரையில் ஏறிய கிளீனர் மின்சாரம் பாய்ந்து பலி
பஸ்சின் மேற்கூரையில் ஏறிய கிளீனர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
திருச்சி:
சென்னை கீழ்கட்டளை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சின்னையாவின் மகன் சிவசந்திரன்(வயது 30). இவர் கரூரில் தனியார் பஸ்சில் கிளீனராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் பஸ் என்ஜின் பிரச்சினையை சரிசெய்வதற்காக நேற்று முன்தினம் காலை திருச்சி வந்தனர். திருச்சி புங்கனூரில் உள்ள பட்டறைக்கு முன் சாலையோரம் பஸ்சை நிறுத்திவிட்டு, பஸ்சின் மேல் பகுதியில் பொருட்கள் ஏதும் இருக்கிறதா என்று பார்க்க சிவசந்திரன் பஸ்சின் மேற்கூரையில் ஏறினார். அப்போது, எதிர்பாராத விதமாக அங்கு இருந்த மின்கம்பியில் அவருடைய கை உரசியது. இதனால் அவருடைய உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி செசன்சு கோர்ட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினாா்கள். பின்னர் அவருடைய உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின்பேரில் செசன்ஸ் கோர்ட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.