இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மத்திய உள்துறை அதிகாரி ஆய்வு

இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் மத்திய உள்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.

Update: 2022-04-07 22:59 GMT
திருச்சி:

உள்துறை அதிகாரி ஆய்வு
திருச்சி மாவட்டத்தில் கொட்டப்பட்டு மற்றும் வாழவந்தான்கோட்டை பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் அமைந்துள்ளன. இந்த முகாம்களில் வாழும் இலங்கை தமிழர்களின் வாழ்க்கைத்தரம், அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் பல்ஜித்சிங் நேற்று திருச்சி வந்தார்.
அவர், கொட்டப்பட்டில் உள்ள முகாமில் நேற்று மதியம் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது, இலங்கை தமிழர்கள் வசிக்கும் வீடுகளுக்கு சென்று அங்குள்ளவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, கொட்டப்பட்டு முகாமில் சுமார் 466 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். ஆனால் 100 வீடுகள் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அனைவருக்கும் வீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தற்போது உள்ள குடியிருப்புகளில் போதுமான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று அங்கு வசிப்பவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்திய குடியுரிமை
மேலும் 8 தலைமுறைகளாக இந்தியாவில் முகாம்களில் வசிக்கும் தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். பட்டப்படிப்பு படித்த பிள்ளைகளுக்கு இலங்கை அகதி என்பதால் பல இடங்களில் வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அவர்களின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு அரசு வேலைவாய்ப்பு கிடைக்க மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என்று வலியுறுத்தினர்.
திருமணமாகி மற்றொரு முகாமில் இருந்து கொட்டப்பட்டு முகாமுக்கு வந்த பெண், தனது பெயர் பழைய முகாமில் நீக்கப்பட்டு விட்டது. ஆனால் இந்த முகாமில் சேர்க்க மறுப்பதாக புகார் தெரிவித்தார். மற்றொரு பெண், கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட தனது கணவரின் பெயரை முகாம் பதிவேட்டில் சேர்க்க மறுப்பதாக தெரிவித்தார்.
பாராட்டு
பின்னர், மத்திய அரசின் சார்பில் முகாமில் வசிக்கும் பெண்களுக்கு தையல் பயிற்சி அளிப்பதை துணை செயலாளர் பார்வையிட்டார். அப்போது, அவர்கள் தயாரித்த ஆடைகளை பார்த்து பாராட்டிய அவர், இத்துடன் நின்றுவிடாமல் நீங்கள் தயாரிக்கும் ஆடைகளை உங்கள் பிரதிநிதிகள் மூலம் மாநில அளவில் சென்னையில் நடைபெறும் கண்காட்சியிலும், தேசிய அளவில் சூரத்தில் நடைபெறும் கண்காட்சியிலும் இடம்பெறச்செய்ய வேண்டும் என்று முகாம் பொறுப்பாளர்களை கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிரிவு அதிகாரி சுப்பிரமணி, வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை மற்றும் மறுவாழ்வுத்துறை துணை இயக்குனர் ரமேஷ், முகாம் தனித்துணை கலெக்டர் ஜமுனாராணி, கே.கே.நகர் உதவி போலீஸ் கமிஷனர் பாஸ்கர், வருவாய் ஆய்வாளர் ரவி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
ஆய்வு குறித்து வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை மற்றும் மறுவாழ்வுத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
விரைவில் நடவடிக்கை
தமிழகம் முழுவதும் பல முகாமில் நடத்தப்பட்ட ஆய்வில், 80 சதவீதம் பேர் இந்தியாவிலேயே தங்கியிருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். தங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உதவும்படியும் அவர்கள் கேட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசுக்கு தமிழக முதல்-அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்கும் என்று நம்புகிறோம்.
தற்போது இந்த முகாமில் 100 வீடுகள் புதிதாக கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான இடம் தேர்வு செய்தவுடன் பணிகள் தொடங்கப்படும். மற்றவர்களுக்கும் அடுத்த கட்டமாக வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும். தற்போது பழுதடைந்துள்ள குடியிருப்புகளை தற்காலிகமாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்