குழுமாயி அம்மன் கோவிலில் குட்டி குடித்தல் திருவிழா
குழுமாயி அம்மன் கோவிலில் குட்டி குடித்தல் திருவிழா நடந்தது.
திருச்சி:
திருச்சியை அடுத்த கே.சோழங்கநல்லூர் கிராமத்தில் உள்ள குழுமாயி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த மாதம் 22-ந் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 4-ந் தேதி மறுகாப்பு கட்டுதலும், 5-ந் தேதி காளியா வட்டமும், 6-ந் தேதி சுத்தபூஜையும் நடந்தது.
முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா மற்றும் ஒண்டி கருப்பண்ண சாமி குட்டி குடித்தல் நிகழ்ச்சி நேற்று மதியம் நடந்தது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட தேரில் குழுமாயி அம்மன் எழுந்தருளியதும் மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் ஊரின் வீதிகளில் தேர் உலா வந்தது. கோவில் முன்பு தேர் நிலை நிறுத்தப்பட்டு, குட்டி குடித்தல் நிகழ்ச்சி நடந்தது. 10-ம் வகுப்பு படிக்கும் மாணவன் தான், மருளாளியாக (ஒண்டி கருப்பன்) குட்டி குடித்தல் நிகழ்ச்சி நடத்தினார். தொடர்ந்து பக்தர்களுக்கு அருள்வாக்கு கூறினார். ஒரு கட்டத்தில் தெய்வமாக அருள்வாக்கு சொன்ன மருளாளியே அழுது விட்டார். உடனே பக்தர்கள், ஒண்டி கருப்பா... உனக்கே சோதனை என்றால் எங்களை காப்பது யார்? என வேதனையுடன் கேள்வி எழுப்பினர். அப்போது, "எனது பிரச்சினையை நான் பார்த்து கொள்கிறேன்". உங்கள் பிரச்சினைகளை நிச்சயம் நான் தீர்த்து வைப்பேன் என்று அருள் வாக்கு கூறினார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனார்.
இதைத்தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. நாளை (9-ந் தேதி) சுவாமி குடிபோகுதல் நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை கே.சோழங்கநல்லூர் கிராம மக்கள் செய்திருந்தனர்.