பள்ளிகளில் புகார் பெட்டி மூலம் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை
மாணவிகள் பிரச்சினை குறித்து பள்ளிகளில் உள்ள புகார் பெட்டி மூலம் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. பொன்னி கூறினார்.
விருதுநகர்,
மாணவிகள் பிரச்சினை குறித்து பள்ளிகளில் உள்ள புகார் பெட்டி மூலம் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டி.ஐ.ஜி. பொன்னி கூறினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
விருதுநகர் சத்திரிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட போலீஸ் நிர்வாகம் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மதுரை சரக டி.ஐ.ஜி. பொன்னி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- தனது பள்ளி நாட்களில் 10-ம் வகுப்பு வரை தமிழ் நாளிதழ்களில் மட்டுமே படித்து போலீஸ் சூப்பிரண்டு, கலெக்டர் ஆகியோரின் படங்களை பார்த்து அது போன்று நாமும் வர வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கி கொண்டேன். அதற்கான இலக்கை ஏற்படுத்தி கொண்டேன். நூலகங்களை பயன்படுத்தி பொது அறிவை வளர்த்து கொள்ள வேண்டும். படிக்கும் போது கவனம் சிதறாமல் படிக்க வேண்டும்.
புகார்பெட்டி
பெண் குழந்தைகள் தங்களது புகைப்படங்களை பெற்றோரை தவிர யாரிடமும் பகிர கூடாது. பள்ளிக்கு வரும் போது யாரும் தொந்தரவு கொடுத்தால் அது பற்றி 1098 மற்றும் 181 ஆகிய டெலிபோன் எண்களுக்கு புகார் தெரிவித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் புகார் பெட்டி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மாணவிகள் தங்களது புகார்களை புகார் பெட்டி மூலம் தெரிவிக்கலாம். தங்களுக்கு பிடித்தமான ஆசிரியையை தேர்வு செய்து அவர்களை தங்கள் ஆலோசகராக கொண்டு தங்கள் பிரச்சினைகளை தெரிவித்து தீர்வுகாணலாம். வாழ்க்கையில் சொந்தக்காலில் நிற்கும் அளவிற்கு திறன் பெற்ற பின்புதான் திருமணத்தை பற்றி சிந்திக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் ஆயிஷா கனி, ஜீவ ரேகா மற்றும் குழந்தைகள் நல பாதுகாப்பு குழு தலைவர் கலாராணி, விருதுநகர் துணை போலீஸ் சூப்பிரண்டு அர்ச்சனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமையாசிரியர் சாந்தி நன்றி கூறினார்.