தோட்டத்தில் மின்வேலி சேதம்; வனக்காப்பாளர் மீது வழக்கு
திருக்குறுங்குடி அருகே தோட்டத்தில் மின்வேலியை சேதப்படுத்தியதாக வனக்காப்பாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
ஏர்வாடி:
திருக்குறுங்குடி அருகே மலையடிபுதூர் நெல்லிதோப்பு மலையடிவாரத்தில், நாங்குநேரி வானமாமலை மடத்திற்கு சொந்தமான விவசாய நிலம் உள்ளது. அதனை தனிநபர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த தோட்டத்துக்குள் வனவிலங்குகள் புகாதவாறு சோலார் மின்வேலி அமைத்ததாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த திருக்குறுங்குடி பீட் வனக்காப்பாளர் கருப்பசாமி, அந்த தோட்டத்தின் மின்வேலியை சேதப்படுத்தியதாகவும், இதனை தடுக்க முயன்ற பெண்ணை அவதூறாக பேசியதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தட்டிக்கேட்ட தோட்ட மேலாளர் அய்யப்பனுக்கு கொலைமிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், வனக்காப்பாளர் கருப்பசாமி மீது கொலைமிரட்டல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.