தொடர் சர்ச்சை கருத்தால் அரசுக்கு நெருக்கடி: போலீஸ் மந்திரி அரக ஞானேந்திராவின் பதவி பறிபோகிறது?

தொடர் சர்ச்சை கருத்துகளை கூறி அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தி வருவதால் அரக ஞானேந்திராவிடம் இருந்து போலீஸ் துறையை பறிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சுனில்குமாருக்கு போலீஸ் மந்திரி பதவி வழங்க வாய்ப்பு இருக்கிறது.

Update: 2022-04-07 21:19 GMT
பெங்களூரு:

மந்திரி அரக ஞானேந்திரா

  கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான பா.ஜனதா ஆட்சியில் போலீஸ் மந்திரியாக இருந்து வருபவர் அரக ஞானேந்திரா. எடியூரப்பாவிடம் இருந்து முதல்-மந்திரி பதவி பறிக்கப்பட்ட பின்பு நடந்த மந்திரிசபை விரிவாக்கத்தின் போது அரக ஞானேந்திராவுக்கு போலீஸ் துறை வழங்கப்பட்டு இருந்தது. முதல் முறையாக மந்திரியாக பதவி ஏற்ற அரக ஞானேந்திராவுக்கு போலீஸ் துறை ஒதுக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருந்தது.

  அதே நேரத்தில் எந்த ஒரு ஊழல் மற்றும் முறைகேட்டில் ஈடுபடாமல் இருந்ததாலும், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களின் ஆதரவு இருந்ததாலும் அவருக்கு போலீஸ் துறையை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஒதுக்கி இருந்ததாக தெரிகிறது. ஆனால் போலீஸ் மந்திரியாக பதவி ஏற்றதில் இருந்தே அரக ஞானேந்திரா சர்ச்சையை ஏற்படுத்தும் விதமான கருத்துகளை கூறி வருகிறார்.

சர்ச்சை கருத்து

  அதாவது போலீஸ் மந்திரியாக அரக ஞானேந்திரா பதவி ஏற்றதும், மைசூருவில் நடந்த மாணவி கற்பழிப்பு குறித்து பேசி இருந்தார். அப்போது ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அந்த மாணவி ஏன் சென்றார்?, இந்த விவகாரத்தில் என்னை எதிர்க்கட்சிகள் கற்பழிக்க முயற்சிக்கிறார்கள் என்று பேசி இருந்தார். அவருடைய இந்த கருத்து, நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

  அதுபோல் சமீபத்தில் சிவமொக்காவில் இந்து அமைப்பை சேர்ந்த ஹர்ஷா என்பவர் கொலை வழக்கிலும் அவர் சர்ச்சை கருத்தை கூறி இருந்தார். 144 தடை உத்தரவு அமலில் இருந்தபோதே ஹர்ஷா ஊர்வலத்தில் மந்திரி ஈசுவரப்பா, ராகவேந்திரா எம்.பி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சிவமொக்காவில் பெரிய அளவில் வன்முறை நடந்திருந்தது. இதனை கட்டுப்படுத்த அரக ஞானேந்திரா தவறி விட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு கூறினார்கள். இதற்கிடையில், பெங்களூருவில் சந்துரு என்ற தமிழக வாலிபர் கொலை செய்யப்பட்டு இருந்தார்.

போலீஸ் துறையை பறிக்க...

  அவருக்கு, உருது மொழி தெரியாததால் தான், அவர் கொலை செய்யப்பட்டு இருப்பதாக அரக ஞானேந்திரா கூறினார். அதன்பிறகு, மோட்டார் சைக்கிள் விவகாரத்தில் சந்துரு கொலை செய்யப்பட்டதாகவும், தான் தவறுதலாக கூறி விட்டதாகவும் விளக்கம் அளித்திருந்தார். இதுபோன்று, தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தும் கருத்துகளை கூறி வருவதால், அதனையே எதிர்க்கட்சியான காங்கிரஸ் கையில் எடுத்து அரசியல் செய்து வருகிறது.

  இது கர்நாடக அரசுக்கு மட்டுமின்றி, பா.ஜனதா மேலிடத்திற்கும் பின்னடைவு மற்றும் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. அரக ஞானேந்திராவின் சர்ச்சை கருத்துகளை உன்னிப்பாக கவனித்து வரும், பா.ஜனதா மேலிடம், அவரிடம் இருந்து போலீஸ் மந்திரி பதவியை பறிக்க முடிவு செய்துள்ளது.

சுனில்குமாருக்கு வாய்ப்பு

  இந்த மாதத்திற்குள் கர்நாடக மந்திரிசபை மாற்றி அமைக்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு செய்துள்ளார். அப்போது அரக ஞானேந்திராவிடம் இருந்து போலீஸ் துறையை பறித்துவிட்டு, வேறு துறை ஒதுக்கப்படலாம் என்றும், அவருக்கு பதிலாக மின்சாரத்துறை மந்திரியாக இருந்து வரும் சுனில்குமாருக்கு போலீஸ் துறை ஒதுக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.

  அவர் தனக்கு ஒதுக்கிய மின்சார துறையை சரியாக நிர்வகித்து வருவதால், சுனில்குமாருக்கு போலீஸ் இலாகா வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

மேலும் செய்திகள்