பி.யூ.சி. தேர்வுகள் வருகிற 22-ந் தேதி தொடக்கம்; ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை
கர்நாடகத்தில் வருகிற 22-ந் தேதி பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுதேர்வுகள் தொடங்க உள்ளது. இந்த தேர்வை ஹிஜாப் அணிந்து எழுத தடை விதிக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.;
பெங்களூரு:
22-ந் தேதி தேர்வு தொடக்கம்
கர்நாடகத்தில் ஹிஜாப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்திருந்தது. இதுதொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் நடைபெற வழக்கில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் சீருடை தான் அணிய வேண்டும், ஹிஜாப் அணிய அனுமதி இல்லை என்று அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என தீர்ப்பு கூறி இருந்தது. இதையடுத்து, ஐகோர்ட்டு உத்தரவுப்படி கர்நாடகத்தில் தொடங்கிய எஸ்.எஸ்.எல்.சி. தேர்வின் போது ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதித்து பள்ளி கல்வித்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதன்படி, ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத வந்த மாணவிகளுக்கு, தேர்வு எழுத அனுமதி வழங்கப்படவில்லை. இந்த நிலையில், கர்நாடகத்தில் வருகிற 22-ந்தேதி பி.யூ.சி. 2-வது ஆண்டுக்கான பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இந்த தேர்வு அடுத்த மாதம் (மே) 18-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை செய்துவருகிறது.
ஹிஜாப்புக்கு தடை
இந்த நிலையில், கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவுப்படி வருகிற 22-ந் தேதி தொடங்கும் பி.யூ.சி. தேர்வையும் மாணவிகள் ஹிஜாப் அணிந்து எழுத தடை விதித்து உத்தரவிட கல்வித்துறை முடிவு செய்திருக்கிறது. இதுதொடர்பாக கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளனர். அப்போது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை போன்று பி.யூ.சி. தேர்வுகளின் போதும் ஹிஜாப் அணிய தடை விதிப்பது, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவை கட்டாயமாக அமல்படுத்துவது என அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
அதன்படி வருகிற 22-ந் தேதி தொடங்கும் பி.யூ.சி. 2-ம் ஆண்டு தேர்வில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதித்து மாநில அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பி.யூ.சி. 2-ம் ஆண்டு பொதுத்தேர்வுக்கான அட்டவணை ற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திருத்தப்பட்ட இறுதி தேர்வு அட்டவணையை நேற்று உயர்கல்வித்துறை ெவளியிட்டுள்ளது.
அதுபற்றிய விவரம் பின்வருமாறு:-
தேர்வு அட்டவணை
தேதி - பாடம்
22-ந்தேதி - லாஜிக், வணிக படிப்புகள்
23-ந்தேதி - கணிதம், கல்வியியல்
25-ந்தேதி - பொருளாதாரம்
26-ந்தேதி - இந்துஸ்தானி இசை, உளவியல், வேதியியல்,
அடிப்படை கணிதம்
27-ந்தேதி - தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, உருது,
சமஸ்கிருதம், பிரெஞ்ச்
28-ந்தேதி - கன்னடம், அரபிக்
மே 4-ந்தேதி - நிலவியல், உயிரியல்
5-ந்தேதி - தகவல் தொழில்நுட்பம், ரீடைல், ஆட்டோ மொபைல்,
ஹெல்த்கேர், பியூட்டி அன்ட் வெல்நஸ்
6-ந்தேதி - ஆங்கிலம்
10-ந்தேதி - வரலாறு, இயற்பியல்
12-ந்தேதி - அரசியல் அறிவியல், புள்ளியல்
14-ந்தேதி - சமூகவியல், எலெக்ட்ரானிக்ஸ், கணினி அறிவியல்
17-ந்தேதி - விருப்ப கன்னடா, கணக்கியல், புவியியல், மனை அறிவியல்
18-ந்தேதி - இந்தி