2 பச்சிளம் குழந்தைகள் கொடூரக்கொலை; கள்ளக்காதலனுடன் தாய் கைது
சுரண்டை அருகே கள்ளக்காதலில் பிறந்த 2 பச்சிளம் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த தாய் தனது கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
சுரண்டை:
தென்காசி மாவட்டம் சுரண்டையை அடுத்த சேர்ந்தமரம் அருகே உள்ளது நொச்சிகுளம் கிராமம்.
குழந்தை பிணம்
இங்குள்ள குளத்தில் கடந்த 2018-ம் பிறந்து 5 நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தை பிணமாக கிடந்தது. இதை பார்த்த அந்த பகுதி மக்கள் இதுகுறித்து உடனடியாக சேர்ந்தமரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, குழந்தை உடலை மீட்டனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
பல்வேறு கட்ட விசாரணைக்கு பின்னர் குளத்தில் வீசப்பட்ட குழந்தை கள்ளக்காதலில் பிறந்தது என்றும், குழந்தையின் தாய் மதுரையில் தனது கள்ளக்காதலனுடன் பதுங்கி இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று 2 பேரையும் சேர்ந்தமரத்திற்கு அழைத்து வந்தனர்.
கள்ளக்காதல்
பின்னர் 2 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது, மற்றொரு குழந்தையையும் அவர்கள் கொன்று புதைத்த திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
சேர்ந்தமரம் அருகே உள்ள நொச்சிகுளத்தை சேர்ந்தவர் முத்துமாரி (வயது 48). இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இவரது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதால் கடந்த 8 ஆண்டுகளாக வெளியூரில் வசித்து வருகிறார். இதனால் முத்துமாரி தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார். அப்போது, பக்கத்து ஊரான வடநத்தம்பட்டியைச் சேர்ந்த தொழிலாளியான சசிகுமார் (50) என்பவருடன் முத்துமாரிக்கு பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.
குளத்தில் வீசினர்
கள்ளக்காதல் ஜோடி அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர். இதன்மூலம் கடந்த 2018-ம் ஆண்டு முத்துமாரிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. கள்ளக்காதலில் குழந்தை பிறந்தது வெளியே தெரிந்தால் அவமானம் ஆகிவிடும் என்று முத்துமாரி நினைத்தார்.
இதுகுறித்து தனது கள்ளக்காதலன் சசிகுமாரிடம் தெரிவித்தார். 2 பேரும் சேர்ந்து குழந்தையை குளத்தில் தூக்கி வீசிவிடலாம் என்று முடிவு செய்தனர். அதன்படி அவர்கள் இரவோடு இரவாக குழந்தையை அங்குள்ள குளத்தில் வீசிக்கொன்றனர். பின்னர் அவர்கள் அங்கு இருந்து சென்றுவிட்டனர்.
மற்றொரு குழந்தை கொன்று புதைப்பு
பின்னர் கடந்த 2019-ம் ஆண்டு கள்ளக்காதலில் முத்துமாரிக்கு மீண்டும் ஆண் குழந்தை பிறந்தது. இதுவும் வெளியே தெரிந்தால் அவமானம் ஆகிவிடும் என்று நினைத்த முத்துமாரி, சசிகுமாருடன் ேசா்ந்து பிறந்த 3 நாட்களே ஆன குழந்தையை கொல்வதற்கு முடிவு செய்தனர்.
முத்துமாரியின் வீட்டின் அருகில் குழித்தோண்டி அந்த குழந்தையை உயிரோடு புதைத்துக் கொன்றனர். 2 குழந்ைதகளை கொடூரமாக கொலை செய்த முத்துமாரி தனது கள்ளக்காதலுடன் தலமைறைவானார்.
கள்ளக்காதலனுடன் கைது
இந்த நிலையில் கள்ளக்காதல் ஜோடி மதுரையில் பதுங்கி இருப்பதாக சேர்ந்தமரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விஜயகுமார் மற்றும் போலீசார் விரைந்து சென்று, 2 பேரையும் கைது செய்தனர். 2 குழந்தைகளையும் கொலை செய்ததை அவர்கள் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் முத்துமாரி, சசிகுமார் ஆகியோர் ஆலங்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
உடல் தோண்டி எடுப்பு
இதற்கிடையே, முத்துமாரி வீட்டின் அருகே புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் குழந்தை புதைக்கப்பட்ட இடம் தோண்டப்பட்டது. அங்கு குழந்தையின் எலும்புக்கூடு மட்டுமே இருந்தது. அதை போலீசார் கைப்பற்றி ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
சுரண்டை அருகே 2 பச்சிளம் குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த தாய் தனது கள்ளக்காதலனுடன் கைது செய்யப்பட்ட பயங்கர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.