தினத்தந்தி புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 8939278888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மாணவ- மாணவிகள் ஆபத்தான பயணம்
தர்மபுரி நகரில் பள்ளி மாணவ- மாணவிகளை ஆட்டோக்களில் அழைத்து செல்வது வழக்கம். அதுவும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதல் மாணவ- மாணவிகளை ஆட்டோக்களில் ஏற்றி செல்கின்றனர். இதனால் இருக்கைகளுக்கு வெளியில் மாணவ- மாணவிகள் தொங்கிக்கொண்டு ஆபத்தான பயணம் செய்கின்றனர். சில இடங்களில் விபத்துக்களும் நடக்கின்றன. எனவே ஆட்டோக்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டும் குழந்தைகளை ஏற்றிச் செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கந்தசாமி, அப்பாவு நகர், தர்மபுரி.
சுகாதார சீர்கேடு
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரத்தில் சாலையோரமாக குப்பைகள் ஆங்காங்கே சிதறி கிடக்கின்றன. குறிப்பாக குப்பைகள் அந்த பகுதியிலேயே தீ வைத்து எரிக்கப்படுவதால் அந்த பகுதி முழுவதும் புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது. இதனால் சாலையில் பயணம் செய்வோருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. எனவே அந்த பகுதியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க அங்கு குப்பை தொட்டி வைக்க வேண்டும்.
-பெரிசாமி, புதுச்சத்திரம், நாமக்கல்.
பாதியில் நிற்கும் சாக்கடை கால்வாய் பணி
சேலம் பென்சன் லைன் சாலை கமிஷனர் அலுவலகம் பின்புறம் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக பாதாள சாக்கடை அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டன. இந்த பணியின்போது மின் வயர்கள் சேதமடைந்ததால் பணி பாதியிலே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஊர்மக்கள், சேலம்.
பஸ் நிறுத்தம் பகுதியில் கழிவுநீர்
நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் புதன் சந்தை பஸ் நிறுத்தம் உள்ளது. நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் பொதுமக்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த பஸ் நிறுத்தத்தில் இருந்து பஸ் ஏறி செல்கின்றனர். இங்குள்ள கடைகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளிவரும் கழிவு நீர் பஸ் நிறுத்தம் பகுதியில் குளம் போல் தேங்குகிறது. இதனால் மாணவ-மாணவிகள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே பஸ் நிறுத்தம் பகுதியில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சரவணன், புதன் சந்தை, நாமக்கல்.
வேகத்தடைகள் அவசியம்
சேலம் சின்னதிருப்பதியை அடுத்த சந்தோஷ் நகர் பகுதியில் இருசக்கர வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் மிகவும் பதற்றமாக சாலையில் செல்ல அச்சப்படுகிறார்கள். சில நேரங்களில் விபத்துகளும் நடக்கின்றன. இதுபற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பொதுமக்களின் நலன் கருதி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் வேகத்தடைகள் அமைத்து தர வேண்டும்.
-சந்தோஷ் நகர் மக்கள், சேலம்.
நோய் பரவும் அபாயம்
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் செல்லும் வழியில் அமைந்துள்ள மயான பகுதியில் நகராட்சி பணியாளர்கள் கழிவு பொருட்களை கொட்டுகின்றனர். இதனால் இறந்தவர்களை அடக்கம் செய்ய வரும் மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். நோய் பரவ வாய்ப்பு உள்ளதால் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அங்கு கழிவு பொருட்களை கொட்டுவதை தவிர்க்க வேண்டும்.
-ஊர்மக்கள், ஜலகண்டாபுரம், சேலம்.