சாலையோர வியாபாரிகள் உண்ணாவிரதம்

ஏற்காட்டில் சாலையோர வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2022-04-07 20:09 GMT
ஏற்காடு:-
ஏற்காட்டில் சாலையோர வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடைகள் அகற்றம்
ஏற்காடு ஒண்டிக்கடை பகுதியில் சாலையோரங்களில் நடைபாதையில் கடைகள் வைத்து நடத்தப்பட்டு வந்தன. இந்த கடைகளால் ஏற்காடு ஏரியும்,  அண்ணா பூங்காவும் மறைக்கப்படுவதாகவும், சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரும் நாட்களில் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகள் ஏற்படுவதாகவும் புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமையில் ஆய்வு நடத்தப்பட்டு, கடைகளை உடனடியாக அப்புறப்படுத்த கேட்டுக்கொள்ளப்பட்டது. இதன் பின்னர் கடைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்படி சில கடைகளை அதன் உரிமையாளர்கள் தாமாக முன்வந்து அகற்றினர். மீதமுள்ள கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அப்புறப்படுத்தினர். 
உண்ணாவிரத போராட்டம்
இதனிடையே சாலையோர வியாபாரிகள் சங்க (சி.ஐ.டி.யு.) மாவட்ட தலைவர் தனசேகரன் தலைமையில் அதிகாரிகளிடம் கடை வைக்க வேறு இடத்தை ஒதுக்கி தர கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.  ஆனால் இதுவரை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும், சாலையோர வியாபாரிகளுக்கு வேறு இடம் ஒதுக்க கோரியும் ஏற்காடு ஒண்டிகடை பகுதியில் நேற்று சாலைேயார வியாபாரிகள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு மாவட்ட செயலாளர் உதயகுமார் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தனசேகரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் நேரு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சாலையோர வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். உண்ணாவிரத போராட்டம் காலை முதல் மாலை வரை நடந்தது.

மேலும் செய்திகள்