புகழூர் வாய்க்கால் கரையோரம் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற கோரிக்கை
புகழூர் வாய்க்கால் கரையோரம் வளர்ந்துள்ள செடி, கொடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நொய்யல்,
புகழூர் வாய்க்கால் ஈரோடு மாவட்டம் காரணாம் பாளையம் காவிரி ஆற்றில் தொடங்கி கரூர் மாவட்டம் நொய்யல் செல்லாண்டியம்மன் கோவில் வழியாக என்.புதூர் வரை செல்கிறது. புகழூர் வாய்க்கால் கரையோரமாக பல கோடி ரூபாய் செலவில் மண் சாலை அமைக்கப்பட்டது. இந்த சாலை வழியாக பொதுப்பணித்துறை அதிகாரிகளின் வாகனங்களும், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் வாகனங்களும் சென்று வந்தன. இந்தநிலையில் வாய்க்கால் கரையில் அமைந்துள்ள சாலையின் இருபுறமும் நாணல் தட்டு மற்றும் பல்வேறு செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்து சாலையை மூடி வருகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் கூட செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் தங்களது விளை பொருட்களையும், இடு பொருட்களையும் இந்த சாலை வழியாக எடுத்துச் சென்று வந்தனர். ஆனால் சாலையின் இருபுறமும் செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளதால் வாகனங்கள் சென்றுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்பந்தப்பட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் போக்குவரத்திற்கு இடையூறாக வளர்ந்துள்ள செடி, கொடிகளை வெட்டி அகற்ற வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.