கிருஷ்ணகிரியில் 3 டன் ரேஷன்அரிசி கடத்தல்; 2 சரக்கு வேன்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரியில் 3 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 சரக்கு வேன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.;
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரியில் 3 டன் ரேஷன் அரிசி கடத்திய 2 சரக்கு வேன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வாகன சோதனை
கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் கோபிநாத், தென்னரசு மற்றும் போலீசார் கிருஷ்ணகிரியில் தாலுகா போலீஸ் நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற 2 சரக்கு வேன்களை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர். அதில் ஒரு வேனில் தலா 50 கிலோ எடை கொண்ட 32 ரேஷன் அரிசி மூட்டைகளில் மொத்தம் 1,600 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
3 டன் ரேஷன் அரிசி
அதே போல மற்றொரு வாகனத்தில் 50 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகள் என மொத்தம் 1,500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. இந்த 2 வாகனங்களையும், 3 டன் ரேஷன் அரிசி மூட்டைகளையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
இந்த ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்தி வந்தவர்கள் யார்? எந்த பகுதியில் இருந்து இந்த ரேஷன் அரிசி கடத்தி வரப்படுகிறது? என கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.