ஓசூர் அருகே பரபரப்பு: 2 கார்களில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள்-போலீசார் கைப்பற்றி விசாரணை
ஓசூர் அருகே 2 கார்களில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மத்திகிரி:
ஓசூர் அருகே 2 கார்களில் கடத்தி வரப்பட்ட ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
2 கார்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா மத்திகிரியில் டைட்டான் டவுன்ஷிப் உள்ளது. இந்த பகுதியில் உள்ள எம்.ஜி.நகரில் நேற்று காலை 2 கார்கள் கேட்பாரற்று நின்றன. அந்த காருக்குள் மரக்கட்டைகள் இருந்தன.
இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து மத்திகிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் வனத்துறை மற்றும் வருவாய்த்துறையினருக்கு போலீசார் தகவல் தெரிவித்தனர்.
ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகள்
இதையடுத்து வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் முன்னிலையில் போலீசார் காரை திறந்து பார்த்த போது ஒரு காரில் 11 செம்மரக்கட்டைகளும், மற்றொரு காரில் 8 செம்மரக்கட்டைகளும் என மொத்தம் 19 செம்மரக் கட்டைகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை எடையிட்டு பார்த்த போது 658 கிலோ இருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.
2 கார்களும் கர்நாடக மாநில பதிவெண் கொண்ட சொகுசு கார்கள் ஆகும். அதன் உரிமையாளர் ஓசூரைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. செம்மரக்கட்டைகளையும், கார்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஆந்திராவில் இருந்து...
ஆந்திர மாநிலம் திருப்பதி சுற்று வட்டார பகுதியில் செம்மரங்கள் அதிக அளவில் உள்ளன. அந்த பகுதியில் செம்மரக்கட்டைகள் வெட்டி கடத்தி வரப்படுவதும், அவை பிடிக்கப்படுவதும் தொடர்ந்து வருகின்றன. இதனால் தற்போது பிடிபட்டுள்ள செம்மரக்கட்டைகள் அனைத்தும் ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் செம்மரக்கட்டைகளுடன் பிடிபட்ட 2 கார்களுக்கு அருகில் மேலும் 3 கார்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதன் உரிமையாளர்கள் யாரும் அங்கு வரவில்லை. அந்த கார்கள் செம்மரக்கட்டை கடத்தல்காரர்களுக்கு சொந்தமானதா? அல்லது வேறு யாரும் அங்கு நிறுத்தி சென்றார்களா? என போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஓசூர் அருகே ரூ.50 லட்சம் செம்மரக்கட்டைகளுடன் 2 கார்கள் பிடிபட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.