காளியம்மன் கோவில்களில் பங்குனி பொங்கல் விழா
காளியம்மன் கோவில்களில் பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
சிங்கம்புணரி,
காளியம்மன் கோவில்களில் பங்குனி பொங்கல் விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
காளியம்மன் கோவில்
சிங்கம்புணரி -திருப்பத்தூர் சாலையில் உள்ளது உப்பு செட்டியார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட காளியம்மன் கோவில். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி பொங்கல் விழா வெகு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு விழா அம்பாளுக்கு பூச்சொரிதல் திருவிழா மற்றும் காப்புக்கட்டுதல் விழாவுடன் தொடங்கியது. கோவிலில் இருந்து பூத்தட்டு ஏந்தி சுமார் 300-க்கும் மேற்பட்ட பெண்கள் திருப்பத்தூர்-திண்டுக்கல் சாலை வழியாக சென்று கோவிலை அடைந்தனர். அங்கு அம்பாளுக்கு பூச்சொரிதல் விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு காப்பு கட்டும் வைபவம் நடந்தது.
வருகிற 12-ந் தேதி பால்குடம், பாலாற்றில் இருந்து அம்மனுக்கு கரகம் எடுத்து வருதல், தீச்சட்டி எடுத்தல், மாவிளக்கு வைத்தல் நிகழ்ச்சியும், 13-ம் தேதி பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு நிகழ்ச்சி நடைபெறும். அன்று மாலை கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 14-ம் தேதி அம்மன் கரகம், தீச்சட்டி, முளைப்பாரி எடுத்து பூஞ்சோலைக்கு கொண்டுசெல்லும் வைபவம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை உப்பு செட்டியார் உறவு முறையினர் செய்துள்ளனர்.
திருவிழா
இதேபோல் சிங்கம்புணரி கக்கன் ஜீ நகரில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா பூச்சொரிதல் விழாவுடன் காப்புக்கட்டு திருவிழா தொடங்கியது. 8 நாள் நடைபெறும் திருவிழாவில் முதல் நாள் நிகழ்ச்சியாக பூச்சொரிதல் விழா நடைபெற்றது. 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பூத்தட்டு ஏந்தி பெரிய கடைவீதி வழியாக கோவிலுக்கு வந்து பூச்சொரிதல் விழா நடைபெற்றது.
தொடர்ந்து காப்பு கட்டும் வைபவம் நடந்தது. வருகின்ற 12-ம் தேதி பால்குடம், தீச்சட்டி, முளைப்பாரி எடுத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பாலாற்றில் இருந்து செட்டியார் குளத்திற்கு கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கக்கன் ஜீ நகர் உறவின் முறையினர் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.