திருக்கொடுங்குன்றநாதர் கோவில் தேரோட்ட திருவிழா

திருக்கொடுங்குன்றநாதர் கோவில் தேரோட்ட திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2022-04-07 18:29 GMT
சிங்கம்புணரி, 
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே திருக்கைலாய பரம்பரை திருவண்ணாமலை ஆதீனம் பிரான்மலை குயிலமுதாம்பிகை உடனாய திருக்கொடுங்குன்றநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் திருத்தேரோட்ட திருவிழா 9 ஆண்டுகளுக்கு பிறகு கொடியேற்றத்துடன் தொடங்கியது. இக்கோவிலில் கடந்த 2012-ம் ஆண்டு தேரோட்டம் நடைபெற்றது. அதற்கு பிறகு கோவில் கும்பாபிஷேக விழா நடத்துவதற்காக பாலாலய விழா நடைபெற்று சுமார் 7 ஆண்டுகள் கும்பாபிஷேக திருப்பணி நடைபெற்று 2019-ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது. அதனைத்தொடர்ந்து 2 ஆண்டுகளாக கொேரானா ஊரடங்கு காரணமாக திருவிழாவிற்கு தடை ஏற்பட்டது. தற்போது கோவில் சித்திரை திருவிழா நடத்த விழா குழுவினர் ஏற்பாடு செய்தனர். அதனடிப்படையில நேற்று பிரான்மலை ஜோதிட சிகாமணி உமாபதி சிவாச்சாரியார் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் கொடியேற்ற வைபவம் நிகழ்ச்சியை நடத்தினர். முன்னதாக பொன்னம்பல அடிகளாரிடம் அனுமதி வாங்கும் நிகழ்வாக அணிக்கை பெறுதல் என்ற ஆதின மரபுப்படி திருத்தேங்காய் தொடுதல் விழா நடைபெற்றது. இதையொட்டி குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் சித்திரை திருவிழா நடைபெறுவதற்கான அணிக்கை பெறுதல் தொடங்கப்பட்டது. தொடர்ந்து நேற்று காலை சுமார் 10.30 மணி அளவில் கோவில் முன்புள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றம் நடந்தது. பின்னர் காப்பு கட்டும் வைபவம், மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக வருகின்ற 11-ந் தேதி திருக்கல்யாண வைபவமும், 15-ந் தேதி விநாயகர், முருகர், குயிலமுதாம்பிகை, திருக்கொடுங்குன்ற நாதர், பிரியாவிடை அம்மன் 4 பெரிய தேர்களில், சண்டிகேஸ்வரர் சப்பரம் என ஐந்து தேர்களில் சாமி ஊர்வலம் நடைபெறும். 16-ந் தேதி மஞ்சுவிரட்டு விழாவும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் மற்றும் பிரான்மலை ஐந்துவகை கோவில் கிராமத்தார்கள் செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்