கைதான பிரபல கொள்ளையன் கோவை சிறையில் அடைப்பு

வெள்ளகோவிலில் மின்வாரிய ஊழியரிடம் கத்தியை காட்டி செல்போன் பறித்து சென்ற பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.

Update: 2022-04-07 18:19 GMT
வெள்ளகோவில்
வெள்ளகோவிலில் மின்வாரிய ஊழியரிடம் கத்தியை காட்டி செல்போன் பறித்து சென்ற பிரபல கொள்ளையனை போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
செல்போன் பறிப்பு 
 வெள்ளகோவில் அருகே உள்ள வீரசோழபுரத்தில்  மின்வாரிய ஊழியர் சுதாகர்  (வயது 35) மற்றும் அவரது நண்பர்கள் ஞானவேல், அசோக் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக  மோட்டார் சைக்கிளில் வந்த திண்டுக்கல் மாவட்டம் குப்பநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் முருகவேல் என்கின்ற ராஜா என்கின்ற பைனான்ஸ் ராஜா (49) சுதாகரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துக் கொண்டார்.  அப்போது  சுதாகரும் அவருடைய நண்பர்களும் சத்தம் போடவே  அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து பைனான்ஸ் ராஜா வை பிடிக்க முயன்றனர்.
அப்ேபாது பைனாஸ் ராஜா அருகில் இருந்த வீட்டின் மீது ஏறி  ஓட்டை பிரித்து பொதுமக்கள் மற்றும் சுதாகர் மீது வீசியுள்ளார். அப்போது பைனான்ஸ் ராஜா நிலை தடுமாறி வழுக்கி கீழே விழுந்து விட்டார். இதில் காயமடைந்த சுதாகர் மற்றும் பைனான்ஸ் ராஜாவை காங்கயம் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இது பற்றி தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று பைனான்ஸ் ராஜாவை மீட்டு திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்து சிகிச்சைக்கு பிறகு அவரை கைது செய்தனர். பின்னர் அவரிடமிருந்து 7 பவுன் தங்க நகைகள் மற்றும் ஒரு செல்போனை பறிமுதல் செய்தனர். அதன்பின்னர் பைனான்ஸ் ராஜாவை காங்ககம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர்.  நீதிபதி பிரவீன் குமார் குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட பைனான்ஸ் ராஜாவை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி  கோவை மத்திய சிறையில் பைனான்ஸ் ராஜா அடைக்கப்பட்டார்.
பல்வேறு வழக்குகள்
 பைனான்ஸ் ராஜா மீது கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி உள்பட 39 வழக்குகள் 25 போலீஸ் நிலையங்களில் பதிவாகி உள்ளது. மேலும் கரூர் மாவட்டம், வெள்ளியணை போலீஸ் நிலையத்தில் குற்ற சம்பவங்களுக்காக 33 ஆண்டுகள் சிறை தண்டனையும், காங்கயம் போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்கில் 7 ஆண்டுகள் தண்டனையும், வெள்ளகோவில் போலீஸ் நிலையத்தில் குற்ற வழக்கில் 9 ஆண்டுகள் தண்டனை பெற்று கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் கடந்த மாதம் 11-ந் தேதி அரவக்குறிச்சி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பான விசாரணைக்கு  போலீசார் அவரை கடலூர் சிறையில் இருந்து பஸ்சில் அழைத்து வந்தனர்.  பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும்  12-ந் தேதி அதிகாலை கள்ளக்குறிச்சி அருகே செல்லும்போது போலீசிடம் இருந்து தப்பி உள்ளார். பின்னர் அப்பகுதியில் உள்ள ஒரு மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு சேலம் வழியாக வெள்ளகோவில் வந்துள்ளார்.  பின்னர் வெள்ளகோவில், ஊதியூர், மூலனூர், கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் ஆகிய பகுதிகளில் வழிப்பறி, செயின் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். இது சம்பந்தமாக திருப்பூர் போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவின் பேரில் காங்கயம் துணை போலீஸ் சூப்பிரண்டு குமரேசன், தாராபுரம் தன்ராஜ் ஆகியோர் தலைமையில் குற்றப் பிரிவு போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்த நிலையில்தான் அவர் மின்வாரிய ஊழியரிடம் கத்தி முனையில் செல்போன் பறித்த போது போலீசில் சிக்கிக்கொண்டார். 
காதல் திருமணம்
இவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள மீனாட்சி வலசு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 15 வயதில் ஒரு மகளும், 10 வயதில் ஒரு மகன் உள்ளனர். இந்நிலையில் அந்த பெண் பைனான்ஸ் ராஜாவை விட்டு பிரிந்து நிலக்கோட்டை பகுதியைச் சேர்ந்த வேறு ஒருவருடன்  குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில்  கடந்த மாதம் 23-ந் தேதி அந்த பெண்ணின்  2-வது கணவர் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக போலீசார் தெரிவித்தனர். 

மேலும் செய்திகள்