நான் சரத்பவாரின் ஆள் என்பதில் ரகசியம் இல்லை- சஞ்சய் ராவத் கூறுகிறார்
நான் சரத்பவாரின் ஆள் என்பதில் ரகசியம் இல்லை என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.;
மும்பை,
நான் சரத்பவாரின் ஆள் என்பதில் ரகசியம் இல்லை என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
பிரதமருடன் சந்திப்பு
நில மோசடி தொடர்பான வழக்கு ஒன்றில் சஞ்சய் ராவத்தின் மனைவி மற்றும் மேலும் 2 பேரின் ரூ. 11 கோடியே 15 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது. இந்த நிலையில் திடீரென சரத்பவார், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பிற்கு பிறகு பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர், சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளர் சஞ்சய் ராவத்திற்கு இழைக்கப்பட்டது அநீதி என தெரிவித்தார்.
பா.ஜனதா கிண்டல்
இதுகுறித்து மராட்டிய எதிர்க்கட்சியான பா.ஜனதா சஞ்சய் ராவத்தை கிண்டல் செய்து வருகிறது. சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் அவரது சொத்த கட்சியின் தலைவரும், முதல்-மந்திரியுமான உத்தவ் தாக்கரேவை விட தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு நெருக்கமானவர் என்பதை காட்டுவதாக கூறி வருகின்றன.
இதுகுறித்து சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் கூறியதாவது:-
நெருக்கமான உறவு
நான் சரத்பவாரின் ஆள் என்பதில் ரகசியம் எதுவும் இல்லை. நான் சிவசேனாவில் இருந்தபோதும், சரத்பவாருடன் எனது உறவு நெருக்கமான இருந்ததால் தான் எங்களால் இந்த அரசாங்கத்தை அமைக்க முடிந்தது. இதனால் பா.ஜனதா வருத்தம் அடைந்துள்ளது. சித்தாந்த ரீதியாக வேறுபட்ட அரசியல் கட்சிகள் என்றாலும் பவாருடன் எனக்கு நல்ல உறவு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.