விபத்தில் விவசாயி பலி; 3 முதியவர்கள் படுகாயம்
விபத்தில் விவசாயி பலியானார். 3 முதியவர்கள் படுகாயம் அடைந்தனர்.
விக்கிரமங்கலம்
அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் அருகே உள்ள கீழநத்தம் நடுதெருவைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன்(வயது 51). விவசாயியான இவர் நேற்று முன்தினம் வீட்டிற்கு வந்த உறவினரை தா.பழுர் அருகே உள்ள காரைக்குறிச்சி கிராமத்தில் தனது மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற விட்டுவிட்டு அங்கிருந்து மீண்டும் திரும்பி தனது வீட்டிற்கு முத்துவாஞ்சேரி வழியாக வந்து கொண்டு இருந்தார். அப்போது முத்துவாஞ்சேரி குஞ்சுவெளி இடையே உள்ள ஓடை அருகே வந்தபோது எதிரே மொபட்டில் வந்த அருள்மொழி கிராமத்தைச் சேர்ந்த ராமலிங்கம்(60), ஸ்ரீபுரந்தான் கிராமத்தைச் சேர்ந்த ராமையன்(65), கிருஷ்ணமூர்த்தி(60) ஆகிய 3 பேரும் வந்த மொபட்டும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இதில் படுகாயம் அடைந்த ராதாகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த விக்கிரமங்கலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசுமருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் படுகாயமடைந்த ராமலிங்கம், ராமையன் கிருஷ்ணமூர்த்தி ஆகிய 3 பேரும் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் இதுகுறித்து விக்கிரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த விபத்து நடக்க காரணம் சாலையில் விவசாய நிலத்தில் அறுவடை செய்யப்பட்ட எள் செடிகள் சாலையில் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தான் என கூறப்படுகிறது. இதனால் சாலையில் எள் செடியை குவித்து வைத்திருந்த அதன் உரிமையாளர் குஞ்சுவெளி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த நெடுஞ்செழியன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.