சின்ன வெங்காயத்தை சாலையில் கொட்டி விவசாயிகள் ஒப்பாரி போராட்டம்
சின்ன வெங்காய விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சின்ன வெங்காயத்தை சாலையில் கொட்டி ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினார்கள்.
திருப்பூர்
சின்ன வெங்காய விலை வீழ்ச்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சின்ன வெங்காயத்தை சாலையில் கொட்டி ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்தினார்கள்.
பெரும் நஷ்டம்
சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பெருத்த நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே சின்ன வெங்காயத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதிக்கக்கோரியும், மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் திருப்பூர் மாவட்ட கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஒப்பாரி போராட்டம் நேற்று காலை நடைபெற்றது. மாநில கொள்கைபரப்பு செயலாளர் ராசு தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் ஈஸ்வரன் முன்னிலை வகித்தார்.
மாநில தலைவர் சண்முகம் பேசும்போது, ‘சின்ன வெங்காயம் விலை கடந்த ஆண்டு அதிகரித்தபோது மத்திய, மாநில அரசுகள் பொதுமக்களின் நலன் கருதி வெங்காய இறக்குமதிக்கு அனுமதி அளித்தது. தற்போது வெங்காயத்தின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தை ரூ.7-க்கு கொள்முதல் செய்கிறார்கள். இதன் காரணமாக சாகுபடி செலவை கூட எங்களால் ஈடுகட்ட முடியவில்லை. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. சின்ன வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். தமிழக அரசு, சின்ன வெங்காயத்தை கூட்டுறவுத்துறை மூலமாக குறைந்தபட்ச விலையாக கிலோ ரூ.40-க்கு கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும்’ என்றார்.
ஒப்பாரி வைத்தனர்
போராட்டத்தின்போது, சின்ன வெங்காயத்தை விவசாயிகள் சாலையில் கொட்டி அதற்கு மாலை அணிவித்து தலையில் துண்டைப்போட்டு சுற்றி அமர்ந்துகொண்டு ஒப்பாரி வைத்தனர். மத்திய, மாநில அரசுகள் தங்களை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். விவசாயி ஒருவர் சின்ன வெங்காயத்தின் மீது படுத்திருந்தார். அவரை சுற்றி ஒப்பாரி பாட்டு பாடினார்கள்.
இந்த போராட்டத்தில் சங்கத்தின் செயல் தலைவர் வெற்றி, மாநில துணை தலைவர் சண்முகசுந்தரம் உள்ளிட்டவர்கள் பங்கேற்றனர். போராட்டம் முடிந்ததும் கோரிக்கை மனுவை கலெக்டரிடம் கொடுக்க கலெக்டர் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். அதற்குள் அங்கிருந்த தெற்கு போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினார்கள். முக்கிய நிர்வாகிகள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படும் என்று தெரிவித்தனர். இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம்
இந்தநிலையில் விவசாயிகளை காவல்துறை அதிகாரி ஒருவர் மிரட்டியதாக கூறி, விவசாயிகள் சங்கத்தினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் நுழைவுவாசலில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றனர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அதற்குள் அங்கிருந்த போலீஸ் உதவி கமிஷனர் வரதராஜன் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் விவசாயிகள் கலெக்டர் அலுவலக வளாகத்துக்குள் அனுதிக்கப்பட்டனர். முக்கிய நிர்வாகிகள் மட்டும் கலெக்டர் வினீத்தை சந்தித்து மனு கொடுத்து முறையிட்டனர்.