வாலிபரிடம் செல்போன் பறிக்க முயன்ற திருநங்கை. பொதுமக்கள் பிடித்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்

ஜோலார்பேட்டை அருகே வாரசந்தையில் வாலிபரிடம் செல்போன் பறிக்க முயற்சித்த திருநங்கையை பொதுமக்கள் பிடித்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

Update: 2022-04-07 17:51 GMT
ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை அருகே வாரசந்தையில் வாலிபரிடம் செல்போன் பறிக்க  முயற்சித்த திருநங்கையை பொதுமக்கள் பிடித்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர்.

செல்போனை பறிக்க முயற்சி

ஜோலார்பேட்டை அருகே சந்தைகோடியூரில் வாரந்தோறும் புதன்கிழமை நடக்கும் வாரச்சந்தை நடந்தது.   இரவு சுமார் 7 மணியளவில் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொது மக்கள் சந்தையில் பொருட்கள் வாங்க வந்திருந்தனர். அப்போது திருநங்கை ஒருவர் சந்தையில் பொருட்கள் வாங்க வந்த ஒரு வாலிபரிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்தார்.

அந்த வாலிபரிடம் சில்லரை இல்லாததால், ரூ.50 கொடுத்து 10 ரூபாய் எடுத்துக்கொண்டு மீதம் 40 ரூபாயை திரும்ப தரும்படி கேட்டார். அதற்கு அந்த திருநங்கை மீதி பணம் தரமுடியாது என கூறி, மேலும் வாலிபரிடம் இருந்த செல்போனை பறிக்க முயன்றார். இதனை தட்டிக்கேட்ட வாலிபரை அந்த திருநங்கை சரமாரியாக தாக்கியதில், அந்த வாலிபருக்கு ரத்தக் காயம் ஏற்பட்டது. 

பொதுமக்கள் தாக்கினர்

உடனே அங்கிருந்தவர்கள் அந்த வாலிபரை மீட்டு ஜோலார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பிவைத்தனர். இதனைதொடர்ந்து அந்த திருநங்கை இதே போன்று மற்றவர்களிடமும் அடாவடியில் ஈடுபட்டார். இதனால் பொறுமையிழந்த பொதுமக்கள் அந்த திருநங்கையை ஓட ஓட விரட்டி தாக்கினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பொதுமக்களிடம் இருந்து திருநங்கையை மீட்டு தனது மோட்டார்சைக்கிளில் அமர வைத்தார். 

அப்போது திருநங்கை தாக்கியதில் படுகாயமடைந்த வாலிபரின் உறவினரான மற்றொரு திருநங்கை, போலீஸ் பிடித்து வைத்திருந்த திருநங்கையை போலீசாரின் கண்முன்னே தரதரவென இழுத்து தாக்கினார். இதனைக் கேள்விப்பட்டு அங்கு வந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி இரு திருநங்கைகளையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்