கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை
தொழிலாளியை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த வழக்கில் கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை
தொழிலாளியை கத்தரிக்கோலால் குத்தி கொலை செய்த வழக்கில் கணவன்-மனைவிக்கு ஆயுள் தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டில் தீர்ப்பளிக்கப்பட்டது.
கத்தரிக்கோலால் குத்திக்கொலை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சாமிதுரை(வயது 45). கூலித்தொழிலாளியான இவரது குடும்பத்தினருக்கும், எதிர் வீட்டில் வசிக்கும் சண்முகம்(42) என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே ஆடு, மாடுகள் மேய்ப்பது மற்றும் பொதுக்குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இதுதொடர்பாக கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் 3-ந் தேதி சாமிதுரைக்கும், சண்முகத்திற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது. அவர்களை அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்த நிலையில் அன்று இரவு தனியாக நின்றிருந்த சாமிதுரையை, சண்முகம் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி(37) ஆகிய இருவரும் சேர்ந்து கட்டையால் தாக்கியும், கத்தரிக்கோலால் குத்தியும் கொலை செய்தனர்.
ஆயுள் தண்டனை
இதுகுறித்து பாகசாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவன்-மனைவி ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை மயிலாடுதுறை மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி பன்னீர்செல்வம் நேற்று தீர்ப்பளித்தார். அப்போது அவர், சண்முகம் மற்றும் ராஜேஸ்வரி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.1,200 அபராதமும், அபராதம் செலுத்த தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கணவன்-மனைவி இருவரையும் போலீசார் வேனில் அழைத்துச்சென்று திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கில் அரசு வக்கீல் ராம.சேயோன் வாதாடினார்.