வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நூதன முறையில் 3 பவுன் சங்கிலி அபேஸ்
குரும்பலூரில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் நூதன முறையில் 3 பவுன் சங்கிலியை மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் அபேஸ் செய்தனர்.
பெரம்பலூர்
ஓய்வு பெற்ற மின் ஊழியரின் மனைவி
பெரம்பலூர் அருகே குரும்பலூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் நடராஜ். இவரது மனைவி ஜெயா(வயது 55). இவர்களுக்கு குழந்தை இல்லை. மின்வாரியத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற கணவர் நடராஜூம் இறந்து விட்டதால் ஜெயா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வருகிறார். மேலும் அவர் கணவரின் ஓய்வூதியத்தில் பிழைப்பு நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று மதியம் ஜெயாவின் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் 2 மர்மநபர்கள் வந்தனர்.
கணவரின் ஓய்வூதியம் தொடர்ந்து கிடைக்க...
அப்போது அவர்கள் ஜெயாவிடம் தொடர்ந்து கணவரின் ஓய்வூதியம் வாங்குவதற்கு புகைப்படம் எடுக்க வேண்டும் என்றும், ஆதார் அட்டையை எடுத்து வாருங்கள் என்று கூறியுள்ளனர். மேலும் அவர்கள் புகைப்படம் எடுக்கும் போது கழுத்தில் தங்க சங்கிலி எதுவும் இருக்கக்கூடாது, கழற்றி வைத்து விடுங்கள் என்று ஜெயாவிடம் கூறியுள்ளனர். அதனை நம்பி ஜெயா தான் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை கழற்றி கட்டிலில் வைத்து விட்டு, ஆதார் அட்டை எடுக்க வீட்டினுள் உள்ள அறைக்கு சென்றுள்ளார்.
தங்க சங்கிலி திருட்டு
அந்த நேரம் பார்த்து அந்த 2 பேரும் ஜெயாவின் தங்க சங்கிலியை திருடிக்கொண்டு அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர். இந்த சம்பவம் அந்தப்பகுதியில் பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி அந்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.