புதிய தேர் அமைக்கும் பணி

புதிய தேர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.;

Update: 2022-04-07 17:43 GMT
ராமநாதபுரம், 
திருஉத்தரகோசமங்கை கோவிலுக்கு 36 அடி உயரத்தில் புதிய தேர் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 
புதிய தேர் 
ராமநாதபுரம் அருகே உள்ளது பிரசித்திபெற்ற திருஉத்தரகோசமங்கை. இந்த ஊரில் மங்களநாதர் மங்களநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. உலகில் முதலில் தோன்றிய கோவில் என்ற புராதன சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் பச்சை மரகதத்திலான ஆடும் திருக்கோலத்தில் அபூர்வ மரகத நடராஜர் சிலை உள்ளது. இந்த கோவிலில் வருடத்தில் ஒருநாள் சிவனுக்கு உகந்தநாளான ஆருத்ரா தரிசனத்தன்று அபூர்வ மரகத நடராஜர் மீது பூசப்பட்டுள்ள சந்தனம் களையப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கு வைக்கப்படும். இந்த கோவிலில் இதுநாள்வரை சிறிய அளவிலான தூக்கி செல்லும் வகையில் தேர்மட்டுமே இருந்து வந்தது. 
இந்நிலையில் கோவிலின் அறங்காவலர் பிரம்மகிருஷ்ண ராஜராஜேஸ்வரி நாச்சியார் முயற்சியின்பேரில் நன்கொடையாளர் மூலம் புதிய தேர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இலுப்பை மரத்திலான 36 அடி உயரமும், 15 அடி அகலமும் கொண்ட அழகிய தேர் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான 4 சக்கரங்கள் திருச்சி பெல் நிறுவனத்தின் சார்பில் தலா 750 கிலோ எடையுள்ள சக்கரங்கள் அமைத்து தேர் உருவாக்கப்பட்டு வருகிறது. 
தீவிரம்
இந்த தேரில் யாழி, குதிரை, சிம்மம், யானை, ரிஷபம் உள்ளிட்ட மரவேலைப்பாடுகளுடன் கூடிய 200 விதமான சாமி பொம்மைகள் அழகுற அமைக்கப்பட்டு பொருத்தப்பட்டு வருகிறது. திருவாரூரில் கடந்த 4 மாதங்களாக இந்த மர வேலைப்பாடுகள் நடைபெற்று தற்போது திருஉத்தரகோசமங்கைக்கு சக்கரங்கள், பொம்மைகள் உள்ளிட்டவைகள் கொண்டுவரப்பட்டு பொருத்தப்பட்டு வருகின்றன.
200 அடி நீள வடகயிறு பொருத்தப்பட்டு தேர் இழுத்து செல்லும் வகையில் தயாராகி வருகிறது. திருவாரூரை சேர்ந்த ஸ்தபதி திருநாவுக்கரசு தலைமையில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்த தேரை இரவு, பகலாக தீவிரமாக வடிவமைத்து வருகின்றனர். ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல்பாண்டியன் தினமும் இந்த பணிகளை ஆய்வு செய்து தேவையான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். 
வெள்ளோட்டம் 
வருகிற 11-ந் தேதிக்குள் இந்த தேர் முழுமை பெற்று வெள்ளோட்டம் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்த மாதம் நடைபெறும் சித்திரை திருவிழாவின்போது சுவாமி- அம்பாள் ஆகியோர் புதிய தேரில் 4 ரத வீதிகளை வலம்வர உள்ளனர். 
புகழ்வாய்ந்த புராதன கோவிலாக இருந்தாலும் பெரிய தேர் இல்லாதது பெரும் குறையாக இருந்து வந்த நிலையில் தற்போது அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய ராட்சத தேர் திருஉத்தரகோசமங்கையில் அமைக்கப்பட்டு வருவது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்