திருப்பத்தூர் அருகே டாக்டர் வீட்டில் 50 பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு
திருப்பத்தூர் அருகே டாக்டர் வீட்டில் 50 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் அருகே டாக்டர் வீட்டில் 50 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
50 பவுன் நகை திருட்டு
திருப்பத்தூர் தாலுகா குனிச்சியை அடுத்த செல்வாத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் தாஸ் (வயது 34). சென்னையில் 108 ஆம்புலன்சில் அவசரகால மருத்துவ நிபுணராக பணிபுரிந்து வருகிறார். இவரது தாய் நாகராணி (50), மனைவி சத்யா (30). இவர்கள் இருவரும் வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். தாசின் தம்பி தசரதன் (25). இவருக்கு வருகிற 15-ந் தேதி திருமணம் நடக்க உள்ளது.
இதற்காக அதிகாலை 3 மணி அளவில் திருமண பத்திரிகை வைக்க சென்னை சென்றுள்ளார். அதனால் நாகராணி வீட்டின் பீரோவை திறந்து பணத்தை தசரதனிடம் கொடுத்துவிட்டு மீண்டும் வீட்டில் படுத்து தூங்கியுள்ளார். காலை 7 மணிக்கு எழுந்து பார்த்தபோது பீரோவில் 50 பவுன் நகை, ரொக்கம் ரூ.2 லட்சம் வைத்திருந்த பையை காணவில்லை. பல இடங்களில் தேடியும் நகை, பணம் கிடைக்கவில்லை.
போலீஸ் விசாரணை
மர்ம நபர்கள் துணிக்குள் மறைத்து வைத்திருந்த சாவியை எடுத்து பீரோவைத் திறந்து அதில் வைக்கப்பட்டிருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.2 லட்சத்தை திருடிச்சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து நாகராணி கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து அங்கு பதிவான கைரேகைகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.