இலுப்பூர் சொர்ணாம்பிகை-பொன்வாசிநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
இலுப்பூர் சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அன்னவாசல்:
பொன்வாசிநாதர் கோவில்
இலுப்பூரில் சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 9.30 மணிக்கு உற்சவ பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.
அதைதொடர்ந்து பொன்வாசிநாதர், சொர்ணாம்பிகை உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கொடியேற்றம்
அதனை தொடர்ந்து காலை 10 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலையில் மேள தாளம் முழங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. பின்னர் கொடிமரத்திற்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
15-ந்தேதி தேரோட்டம்
இதை தொடர்ந்து நேற்று முதல் தினசரி காலை, மாலை பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும், மண்டகப்படிதாரர்களின் சிறப்பு பூஜைகளும் நடக்கிறது. வருகிற 13-ந்தேதி திருக்கல்யாணமும், 15-ந்தேதி தேரோட்டமும் நடக்கிறது.
16-ந்தேதி மாலை தீர்த்தவாரியும், அன்று இரவு கொடியிறக்கமும் நடக்கிறது. கோவில் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில்நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் செய்து வருகின்றனர்.