நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா
குடியிருப்பு பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்க எதிர்ப்பு நகராட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விழுப்புரம்,
விழுப்புரம் நகராட்சி 30-வது வார்டுக்குட்பட்ட அனிச்சம்பாளையம் பகுதியில் மீன் மார்க்கெட் அமைக்கும் பணி தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ள நிலையில் திருமண மண்டபம், மின்வாரிய அலுவலகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் அப்பகுதியில் மீன் மார்க்கெட் செயல்படக்கூடாது என்று பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மீன் மார்க்கெட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் சத்தியவதிவீரா தலைமையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் குடியிருப்போர் நலச்சங்கத்தினர், மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். தொடர்ந்து, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷாவிடமும் மனு அளித்த அவர்கள், மீன் மார்க்கெட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து திடீரென நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனே அவர்களிடம் அதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போகச்செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.