அறிவுரை பொதுமக்களுக்கு மட்டும் தானா?
கோவையில் சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகளை பிடித்து, நாற்காலியில் அமர வைத்து போலீசார் அறிவுரை வழங்கினர். மற்றொரு பக்கம் போலீசாரை விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவை
கோவையில் சாலை விதிகளை மீறிய வாகன ஓட்டிகளை பிடித்து, நாற்காலியில் அமர வைத்து போலீசார் அறிவுரை வழங்கினர். மற்றொரு பக்கம் போலீசாரை விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்தை தடுக்க நடவடிக்கை
கோவை மாநகரில் அடிக்கடி விபத்துகள் அரங்கேறி வருகின்றன. இந்த சாலை விபத்துகளை தடுக்க மாநகர போலீஸ் கமிஷனர் பிரதீப் குமார் உத்தரவின் பேரில் போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் செந்தில் குமார் மேற்பார்வையில் போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
மேலும் வாகன ஓட்டிகள் பின்பற்றவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். அத்துடன் போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடித்து அபராதம் விதித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது மாநகரில் ‘ஜீரோ வைலேசன்' என்ற தலைப்பில் விபத்துகளை குறைக்க போக்குவரத்து போலீசார் புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
வாகன சோதனை
அதன் ஒரு பகுதியாக நேற்று காலை கோவை-அவினாசி ரோடு அண்ணா சிலை சிக்னலில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்பட போக்குவரத்து போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த வழியாக வாகனத்தில் ஹெல்மெட் அணியாமலும், செல்போனில் பேசியபடியும், சிக்னலில் சிவப்பு விளக்கு விழுந்தும் அதை மதிக்காமல் கடந்து வந்த வாகன ஓட்டிகள், சிக்னலில் வெள்ளை கோட்டுக்கு வெளியே நின்றிருந்த வாகன ஓட்டிகள் என சாலை போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாமல் வந்த வாகன ஓட்டிகளை போக்குவரத்து போலீசார் மடக்கி பிடித்தனர்.
இருக்கையில் அமர வைத்து அறிவுரை
பின்னர் அவர்களை சிக்னல் அருகே மரநிழலில் நாற்காலி போட்டு அதில் அமரவைத்து 10 நிமிடம் அறிவுரை வழங்கினார்.
அதில் போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றுவது, விபத்து ஏற்பட்டால் ஏற்படும் காயங்கள் மற்றும் உயிரிழப்புகள் குறித்தும் இதனால் குடும்பத்தினருக்கு ஏற்படும் இன்னல்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் அவர்கள் அனைவரையும் அபராதம் விதிக்காமல் அனுப்பி வைத்தனர்.
போலீசாரே விதிமீறல்
போலீசார் ஒரு பக்கம் பொதுமக்களுக்கு இவ்வாறு அறிவுரை கூறினாலும், இதற்கு மாறாக மற்றொருபுறம் போலீசாரே விதிமுறைகளை மீறுவது தொடர்கதையாகி வருகிறது. இதன்படி நேற்று அண்ணாசிலை சிக்னல் பகுதியிலிருந்து அரசு கலைக்கல்லூரி சாலை வழியாக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு ஒரே மோட்டார் சைக்கிளில் 2 போலீசார் உள்பட 3 பேர் சென்றனர்.
ஒரே மோட்டார் சைக்கிளில் 2 பேருக்கு மேல் செல்லக்கூடாது அதுவும், பின்னால் இருப்பவர்கள் ஹெல்மேட் அணியவும் இல்லை.
என்னதான் அவசர காரணமாக இருந்தாலும் பொதுமக்கள் இவ்வாறு விதிகளை மீறி சென்றால் போலீசார் ஏற்றுக் கொள்வார்களா?
எனவே அறிவுரை கூறும் போலீசாரே, பொது இடங்களில் இவ்வாறு விதிகளை மீறி நடந்து கொள்ளலாமா என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.