‘தினத்தந்தி’ புகார் பெட்டி

‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்

Update: 2022-04-07 18:45 GMT
‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் பதிவான மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

தெருவிளக்குகள் ஒளிருமா?

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஐவநல்லூர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் உள்ள மின்கம்பங்களில் தெருவிளக்குகள் ஒளிருவதில்லை. இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த பகுதியில உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் அவர்கள் அச்சத்துடன் அப்பகுதியில் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள தெருவிளக்குகள் ஒளிர நடவடிக்கை எடுப்பார்களா?
-செல்வா, ஐவநல்லூர்.

கனரக வாகனங்களால் பொதுமக்கள் அவதி

மன்னார்குடி-திருமக்கோட்டை சாலையின் வழியாக அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் தினமும் வாகனங்களில் சென்று வருகின்றனர். குறிப்பாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ-மாணவிகள் இந்த சாலையை தான் பெரிதும் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில் மன்னார்குடி- திருமக்கோட்டை சாலையில் காலை, மாலை நேரங்களில் கனரக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு, அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கனரக வாகனங்கள் செல்வதற்கு உரிய நேரத்தினை அறிவிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், மன்னார்குடி.

மேலும் செய்திகள்