அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா
திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.;
திருக்கடையூர்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில், தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆயுள் விருத்திக்காக திருமணங்கள் மற்றும் பூஜைகள் நடைபெறுவது சிறப்பம்சமாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் 14 நாட்கள் சித்திரை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல, இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி விநாயகர், அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் அருகில் எழுந்தருளினர். பின்னர், சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது.
தேரோட்டம்
விழாவில் கட்டளை தம்பிரான் சுவாமிகள், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. நாளை(சனிக்கிழமை) அமிர்தகடேஸ்வரருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சியும், 12-ந் தேதி(செவ்வாய்க்கிழமை) இரவு எமசம்ஹாரமும், 14-ந் தேதி காலை 9 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது.