துணைத்தலைவர் வேறு கட்சி என்பதால் கீழே அமரச்சொன்ன தலைவர்
ஆரணி நகராட்சி கூட்டத்தில், துணைத்தலைவர் வேறு கட்சி என்பதால் அவரை கீழே அமருமாறு தலைவர் கூறினார். இதனால் தமிழ்த்தாய் வாழ்த்து படலை நிறுத்தி துணைத்தலைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆரணி
ஆரணி நகராட்சி கூட்டத்தில், துணைத்தலைவர் வேறு கட்சி என்பதால் அவரை கீழே அமருமாறு தலைவர் கூறினார். இதனால் தமிழ்த்தாய் வாழ்த்து படலை நிறுத்தி துணைத்தலைவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கீழே அமரச்சொன்ன தலைவர்
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி கூட்டம், நகராட்சி தலைவர் ஏ.சி.மணி தலைமையில் நடந்தது.
கூட்டம் தொடங்கியதும் ஆணையாளர், தலைவர் ஆகியோர் மேடையில் நின்று கொண்டு தமிழ்த் தாய் வாழ்த்து பாடல் போட சொன்னார்கள்.
அப்போது துணைத்தலைவர் பாரி பி.பாபு கீழே நின்று கொண்டிருந்தார். அவர் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலை நிறுத்துங்கள். முதலில் துணைத் தலைவருக்கு இருக்கை எங்கே போடவேண்டுமோ அதை முறைப்படி போடுங்கள் என்று கூறினார்.
அதற்கு நகரமன்ற தலைவர் ஏ.சி.மணி இதுவரை ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள் தலைவர், துணைத் தலைவராக இருந்ததால் ஒன்றாக அமர்ந்திருந்தார்கள்.
இப்போது தலைவர் ஒரு கட்சி, துணைத்தலைவர் வேறு கட்சி என்பதால் நீங்கள் கீழே அமருங்கள் என கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த துணைத்தலைவர் ஆணையாளரை பார்த்து இதுதான் முறையா? என்று கேட்டார். அதற்கு ஆணையாளர் தலைவரின் அருகில்தான், துணைத்தலைவர் அமர வேண்டும் என பதிலளித்தார். அப்படி என்றால் தலைவர் அருகில் இருக்கை போடுங்கள் என்று கூறினார்.
தலைவருக்கு அருகில் இருக்கை
அதைத்தொடர்ந்து தலைவரின் இருக்கை அருகிலேயே துணைத்தலைவருக்கும் நாற்காலி போடப்பட்டது. பின்னர் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு கூட்டம் தொடங்கியது.
அப்போது பொறியாளர் டி.ராஜவிஜய காமராஜ் மன்ற கூட்டத்தில் உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள் தவிர மற்ற யாரும் உள்ளே அமர வேண்டாம் என கூறினார்.
இதனால் உள்ளே இருந்த பார்வையாளர்கள், பெண் கவுன்சிலரர்களின் கணவர்களுக்கிடையே சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் வெளியே சென்றனர்.
தொடர்ந்து கூட்டம் நடந்தது. கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பிரச்சினைகள்குறித்து பேசினர். ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி பேசுகையில் நகராட்சியில் ஓய்வு பெற்ற 35-க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.2 கோடி இதுவரை வழங்கப்படவில்லை.
ரூ.15 கோடியே 89 லட்சம் வரை வரி பாக்கி உள்ளது.. நகராட்சி அலுவலர்கள், தொழிலாளர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளம் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் அரசிடமிருந்து போதிய நிதி வராததால் கையிருப்பில் உள்ள திட்ட நிதியிலிருந்து தான் வழங்கப்பட்டு வருகிறது. கூடிய விரைவில் அனைத்தும் சரி செய்யப்படும் என்றார்.
கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.