செம்மரங்கள் வெட்டுவதற்காக மலைக்கிராம இளைஞர்களை மூளை சலவை செய்யும் இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை. போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
செம்மரங்கள் வெட்டுவதற்காக மலைக்கிராம இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்தார்.
வேலூர்
செம்மரங்கள் வெட்டுவதற்காக மலைக்கிராம இளைஞர்களை மூளைச்சலவை செய்யும் இடைத்தரகர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தெரிவித்தார்.
செல்போன்கள் ஒப்படைப்பு
வேலூர் மாவட்டத்தில் கடந்த 3 மாதங்களில் காணாமல் போன மற்றும் தவறவிட்ட 60 செல்போன்கள் மீட்கப்பட்டு, அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுந்தரமூர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு பூபதிராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் தலைமை தாங்கி ரூ.10 லட்சம் மதிப்பிலான 60 செல்போன்களை அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். பின்னர் செல்போன்களில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள காவலன் செயலியை பதிவிறக்கம் செய்வது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், இன்ஸ்பெக்டர்கள் முரளி, அபர்ணா, நாகேந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
வயர்லெஸ் கேமராக்கள்
வேலூர் மாவட்டத்தில் குற்றச்சம்பவங்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 42 ரோந்து வாகனங்களில் ஜி.பி.எஸ். கருவிகள் போலீசாரின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது. வேலூர் புதிய பஸ்நிலையம், கிரீன்சர்க்கிள், விருதம்பட்டு, காமராஜர் சிலை சந்திப்பு, தொரப்பாடி, சத்துவாச்சாரி உள்ளிட்ட பகுதிகளில் வயர்லெஸ் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளன. இதற்கான பணிகள் விரைவில் முடிந்து பயன்பாட்டிற்கு வரும்.
ஆந்திராவில் இருந்து வேலூர் மாவட்டம் வழியாக தமிழகத்துக்கு கஞ்சா கடத்தி வருவதை தடுக்க சோதனைச்சாவடிகளில் மோப்பநாயுடன் தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. கஞ்சா ஆபரேசன் 2.0-வில் 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 824 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 8 பெண்கள் உள்பட 100 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதேபோன்று கஞ்சா கடத்திய, விற்ற 16 பேர் கைதாகி உள்ளனர். 45 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மலைக்கிராமங்களில் விழிப்புணர்வு
சிறுவர்கள், பள்ளி மாணவர்கள் மூலம் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு போதைப்பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் மூலம் பெருமளவு குற்றங்களை தடுக்க முடியும். பள்ளி, கல்லூரி பகுதிகளில் குற்றச்சம்பவங்களை தடுக்க போலீசார் ரோந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வேலூர் மாவட்டம் அல்லேரி, பீஞ்சமந்தை மலைகளில் சாராயம் காய்ச்சுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதையும்மீறி சாராயம் காய்ச்சி, விற்பனையில் ஈடுபட்ட 10 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். சாராயம் காய்ச்சியவர்கள் மனம் திருந்தினால் ரூ.50 ஆயிரம் வழங்கி வேறு தொழில் தொடங்க அல்லது அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வழிவகை செய்யப்படும். தமிழக-ஆந்திர மாநில எல்லையோர மலைக்கிராமங்களில் நக்சலைட் நடமாட்டம் இருந்தால் தகவல் தெரிவிக்கும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
இடைத்தரகர்களின் பட்டியல் சேகரிப்பு
வேலூர் மாவட்டத்தில் உள்ள மலைக்கிராமங்களை சேர்ந்த இளைஞர்களை செம்மரம் வெட்டுவதற்காக மூளைச்சலவை செய்யும் இடைத்தரகர்களின் பட்டியல் சேகரிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களின் கைரேகைகள் போலீசாரிடம் உள்ளன. எனவே குற்றங்களில் ஈடுபடும் நபர்களை எளிதாக கண்டறிந்து கைது செய்ய முடியும். வேலூர் மாவட்டத்தில் உரிய ஆவணம் இன்றி இயங்கும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
செல்போன், வாகனங்கள் திருட்டு குறித்து புகார் அளித்த 30 நிமிடங்களுக்குள் போலீசார் ஒப்புகை சீட்டு (சி.எஸ்.ஆர்.) வழங்க வேண்டும். இல்லையென்றால் அந்த போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்படுவார். அதன்பின்னர் உண்மை தன்மையை அறிந்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைக்க வேலூர்-ஆற்காடு சாலை, காட்பாடி சாலை, மண்டித்தெருவில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.