சரக்கு ரெயில் மூலம் யூரியா சூப்பர் பாஸ்பேட் உரங்கள் வருகை

தூத்துக்குடியில் இருந்து திருவண்ணாமலைக்கு சரக்கு ரெயில் மூலம் யூரியா சூப்பர் பாஸ்பேட் உரங்கள் வந்தன.;

Update: 2022-04-07 16:54 GMT
திருவண்ணாமலை

தூத்துக்குடியில் இருந்து திருவண்ணாமலைக்கு சரக்கு ரெயில் மூலம் யூரியா, சூப்பர் பாஸ்பேட் உரங்கள் வந்தன. 

உரங்கள் வருகை

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நடப்பு பருவத்திற்கு தேவையான 983 டன் யூரியா மற்றும் 64 டன் சூப்பர் பாஸ்பேட் உரங்கள் சரக்கு ரெயில் மூலம் இன்று திருவண்ணாமலைக்கு வந்தடைந்தது. 

இதனை வேளாண்மை உதவி இயக்குனர் (தகவல் மற்றும் தரக்கட்டுப்பாடு) எம்.என்.விஜயகுமார் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

பின்னர் உரங்கள் லாரிகள் மூலம் தனியார் மொத்த மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது. 

தொடர்ந்து அவர் கூறியதாவது:-

 நடப்பு பருவத்திற்கு தேவையான வேளாண் இடுபொருட்களான விதைகள் மற்றும் உரங்கள் உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு கிடைக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

தேவையான உரங்கள் இருப்பு

நடப்பு பருவத்திற்கு தேவையான உரங்கள் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கங்களில் 1237 டன் யூரியா, 597 டன் டி.ஏ.பி., 723 டன் பொட்டாஷ், 4359 டன் காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 317 டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

விவசாயிகள் உர விற்பனை நிலையங்களுக்கு ஆதார் எண்ணுடன் சென்று மண் வள அட்டை பரிந்துரையின் படி பயிருக்கு தேவையான உரங்களை மட்டும் பாயிண்ட் ஆப் சேல்ஸ் எந்திர மூலம் ரசீது பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்கள் அரசு நிர்ணயித்த விலைக்கு மிகாமல் பாயிண்ட் ஆப் சேல்ஸ் கருவி வாயிலாக விவசாயிகளுக்கு உரம் வினியோகம் செய்ய வேண்டும். 

உரக்கட்டுப்பாடு ஆணை 1985-ன் சட்ட விதிகளுக்கு உட்பட்டு உர விற்பனையாளர்கள் விவசாயிகளுக்கு மானிய விலையிலான உரங்கள் பாயிண்ட் ஆப் சேல்ஸ் கருவி மூலம் விற்பனை செய்ய வேண்டும்.

 விவசாயிகள் விரும்பாத இதர இடுபொருட்களை கட்டாயப்படுத்தி விற்பனை செய்வது தொடர்பான புகார்கள் பெறப்பட்டால் உர உரிமங்கள் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் செய்திகள்