அரசு ஆஸ்பத்திரி பெண்கள் வார்டில் கூடு கட்டியுள்ள தேனீக்கள்
கடலூர் அரசு ஆஸ்பத்திரி பெண்கள் வார்டில் தேனீக்கள் கூடுகட்டியுள்ளன. இதனை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
கடலூர்,
கடலூர் மஞ்சக்குப்பத்தில் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினசரி 500-க்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் 300-க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக உள்ளனர். இதில் ஆஸ்பத்திரி வளாகத்தின் பின்பகுதியில் உள்ள கட்டிடத்தின் 2-வது தளத்தில் பெண்கள் வார்டு செயல்படுகிறது.
இங்கு 80-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர். இங்குள்ள ஒரு அறையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தேனீக்கள் கூடு கட்ட தொடங்கியது. இதுபற்றி அந்த வார்டில் தங்கியுள்ள பெண்கள், மருத்துவ பணிகள் இணை இயக்குனர் மற்றும் தீயணைப்பு துறையில் புகார் அளித்தும், இதுவரை அகற்றப்படவில்லை.
நடவடிக்கை
ஆரம்பத்திலேயே தேன் கூட்டை அகற்றாததால், தற்போது அந்த கூடு மிகப்பெரிதாக உள்ளது. அந்த தேன் கூட்டை பார்க்கும் போதே பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுகிறது. மேலும் அந்த வார்டுக்குள் செல்பவர்களை தேனீக்கள் கொட்டியும் வருகிறது.
இதனால் பெண்கள் வார்டுக்குள் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். இதனால் பெண்கள் வார்டில் கட்டியுள்ள தேனீக்களை பாதுகாப்பாக அகற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.