மின் வசதி இல்லாமல் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் மாணவர்கள்
அதியங்குப்பம் கிராமத்தில் மின் வசதி இல்லாமல் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படிக்கும் மாணவர்கள்
வந்தவாசி
வந்தவாசியை அடுத்த அதியங்குப்பம் கிராமத்தில் ஏரிக்கரை அருகே 12 பழங்குடியின மக்கள் கடந்த 40 ஆண்டுகளாக வசித்து வந்தனர்.
கடந்த 3 மாதத்துக்கு முன்பு வருவாய்த்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் அந்த 12 பழங்குடியின குடும்பங்களை அங்கிருந்து காலி செய்து விட்டு, அவர்களுக்கு மாற்று இடம் வழங்கினர்.
மாற்று இடத்தில் பழங்குடியின குடும்பங்களை சேர்ந்தவர்கள் குடிசை போட்டு வசித்து வருகின்றனர். 3 மாதங்கள் ஆகியும் மாற்று இடத்தில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட எந்த ஒரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் பள்ளி மாணவ-மாணவிகள் படிக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மாணவ-மாணவிகள் மெழுகுவர்த்தி மற்றும் தீப்பந்தம் ஏற்றி சிரமத்துடன் படித்து வருகின்றனர்.
தற்போது 10, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்க உள்ள நிலையில், மின்சார வசதி இல்லாமல் எங்களால் படிக்க முடியவில்லை என பள்ளி மாணவ-மாணவிகள் வேதனை தெரிவித்தனர்.
மின்சாரம் இல்லாததால் இரவில் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ உயிரினங்கள் நடமாட்டம் உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் எனப் பள்ளி மாணவ-மாணவிகள், பழங்குடியின மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.