திருச்சி விவசாயியிடம் ரூ.1½ லட்சம் திருடிய வாலிபர் சிறையில் அடைப்பு
ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க உதவி செய்வதுபோல் நடித்து திருச்சி விவசாயியிடம் ரூ.1½ லட்சம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கரூர்,
திருச்சி விவசாயி
திருச்சி மாவட்டம் அண்ணா நகரை சேர்ந்தவர் பொன்னையன் (வயது 56), விவசாயி. இவர் சம்பவத்தன்று கரூரில் உள்ள ஒரு தனியார் வங்கி ஏ.டி.எம்.க்கு பணம் எடுப்பதற்காக சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த வாலிபரிடம் தனக்கு ஏ.டி.எம்.மில் இருந்து பணம் எடுக்க உதவுமாறு கேட்டுள்ளார்.அப்போது அந்த ஆசாமி பணம் எடுக்க உதவி செய்வதுபோல் நடித்து பொன்னையனின் ஏ.டி.எம். கார்டை வாங்கி மற்றொரு ஏ.டி.எம். கார்டை அவரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
சிறையில் அடைப்பு
இந்தநிலையில் பொன்னையனின் வங்கி ஏ.டி.எம். கார்டு மூலம் ரூ.1½ லட்சம் திருடப்பட்டது அவருக்கு தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக பொன்னையன் கொடுத்த புகாரின் பேரில் கரூர் டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.இதில், திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள புகையிலைபட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம் (26) என்பவர் பொன்னையனின் வங்கி ஏ.டி.எம்.மில் இருந்து பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.